நாம் சகோதரி சபரிமாலா அவர்களுக்கு எழுதிய முந்தைய கட்டுரையை படிக்க கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கவும்:
முந்தைய கட்டுரையில் "குர்ஆன் வசனம் 4:24 பற்றி சகோதரி அவர்களிடம் கேள்விகள் கேட்டுயிருந்தோம்", இந்த கட்டுரையில் இன்னொரு குர்ஆன் வசனத்தை சகோதரிக்கு அறிமுகம் செய்யவுள்ளோம். இவ்வசனத்தையும் சகோதரி அவர்கள் தம்முடைய "தினம் ஒரு நிமிடம் திருக்குர்ஆனுடன்" என்ற தலைப்பில் எடுத்து பேசி, விளக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.
தினம் ஒரு நிமிடம் திருக்குர்ஆனுடன் - குர்ஆன் 4:34 - பாகம் 2
குர்ஆனும் பெண்களும் 2: முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிக்கலாம் என்று அனுமதியளித்த அல்லாஹ்
சகோதரி சபரிமாலா அவர்களே, இன்று இன்னொரு குர்ஆன் வசனத்தை நாம் சிந்திக்கவுள்ளோம். உங்களுடைய பெண் விடுதலை என்ற சமூகசேவை வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்.
இஸ்லாமை விட்டு வெளியே வந்தால் தான் பெண் விடுதலையடைய முடியும் என்பது என் கருத்து, குர்ஆன் படி நடந்தால் தான், பெண்ணுக்கு விடுதலை கிடைக்கும் என்பது உங்களின் நிலைப்பாடு (இப்படி நான் சொல்லவில்லையே, குர்ஆனை பின்பற்றினால் தான் பெண் விடுதலையடைவாள் என்று நான் (சபரிமாலா) சொல்லவில்லையே என்று நீங்கள் சொல்வீர்களானால், என்னுடைய மேற்கண்ட ஒருவரியை நான் திரும்ப பெற்றுக்கொள்கிறேன், என்னை மன்னிக்கவும்! அப்படியானால், குர்ஆனை பின்பற்றினாலும் பெண் விடுதலையடைய முடியாது என்பது உங்கள் நிலைப்பாடா? நீங்கள் தான் இந்த சந்தேகத்தை தீர்க்கவேண்டும்).
சரி, வாருங்கள் குர்ஆன் 4:34ஐ ஆய்வு செய்வோம், இவ்வசனத்தை நான்கு தமிழாக்கங்களில் படிக்கலாம். ஒரே தமிழாக்கத்தில் படித்தால், என் மீது நீங்கள் குற்றம் சாட்டலாம், எனவே இணையத்தில் கிடைக்கும் 5 தமிழாக்கங்களில் காண்போம்.
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
4:34 . . . .எவளும் கணவனுக்கு மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையில் இருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும் மிகப் பெரியவனுமாக இருக்கின்றான்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
4:34 . . . மேலும், எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவருக்கு)மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அந்தப் பெண்களுக்கு நல்லறிவு புகட்டுங்கள்; படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள்! மேலும் அவர்களை அடியுங்கள்! ஆனால் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்துவிட்டால், பிறகு அவர்களுக்கு எதிராகக் கை நீட்ட எந்த சாக்குபோக்குகளையும் தேடாதீர்கள்! திண்ணமாக நம்புங்கள்: அல்லாஹ் மேலே இருக்கின்றான்; அவன் உயர்வானவனும் பெரியோனுமாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
4:34 . . .இன்னும், (அப்பெண்களாகிய) அவர்களில் (தம் கணவனுக்கு) எவர்களின் மாறுபாட்டை அஞ்சுகிறீர்களோ, அப்போது அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள், (அவர்கள் திருந்தாவிடில்) படுக்கைகளிலும் அவர்களை வெறுத்து (ஒதுக்கி) விடுங்கள், (அதிலும் அவர்கள் சீர்திருந்தாவிடில்) அவர்களை (காயமேற்படாது) அடியுங்கள், அதனால் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்பட்டுவிட்டால், அவர்கள் மீது (இதர குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்வானவனாக, மிகப் பெரியவனாக இருக்கின்றான்.
பிஜே தமிழாக்கம்
4:34.. . .பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்!66 அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.
முதலாவதாக, அரபி மூல மொழி வசனத்தில் 'இலேசாக அடியுங்கள் என்றோ, காயமேற்படாதவாறு அடியுங்கள் என்றோ இல்லை' என்பதை சகோதரி கவனிக்கவேண்டும். மொழியாக்கம் செய்தவர்கள், சுயமாக அடைப்பிற்குள் இப்படிப்பட்ட வாசகங்களை அதிகபடியாக சேர்த்துவிட்டு, குர்-ஆனை காப்பாற்ற முயலுகின்றார்கள்.
இவ்வசனத்தின்படி மனைவியை அடிக்கலாம் என்று அல்லாஹ் முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கிறான். சில முஸ்லிம்கள் மனைவியை மயில் இறகால் அடிக்கலாம், சின்ன குச்சிகளைக் கொண்டு அடிக்கலாம், வலிக்காதபடி அடிக்கலாம் என்று பலவகையாக சாக்குபோக்குச் சொல்வார்கள். ஆனால், குர்ஆன் இப்படி எதையும் சொல்லவில்லை. மனைவியை அடிக்கலாம் என்று இறைவனே சொல்லிவிட்டதால், தவறு செய்யும் ஆண்கள், தங்கள் மனைவிகளை பயமில்லாமல் அடிப்பார்கள்!
இரண்டாவதாக, இந்த வசனத்தின்படி, ஒரு முஸ்லிம் கணவன் தன் மனைவி ஏதோ ஒரு விஷயத்தில் தனக்கு மாறுசெய்வாள் என்று அஞ்சினால் போதும், மேற்கண்ட காரியங்களைச் செய்யலாம். அதாவது, அந்த செயல் அல்லது அவள் ஏற்கனவே மாறு செய்துவிட்டால் அதன் பிறகு தான் கணவன்மார்கள் செயல்படவேண்டும் என்பதல்ல, ஆண்களுக்கு இவள் நமக்கு ஏதோ ஒரு மாறு செய்வாள் என்று சந்தேகம் வந்தாலே போதும், மேற்கண்ட காரியங்களைச் செய்யலாம், எவ்வளவு பெரிய கேடுகெட்ட கட்டளையாக இது இருக்கிறது என்று பாருங்கள்! நாம் அவ்வப்போது செய்திகளில் வாசிக்கிறோம் : "மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவன் மனைவியை அடிக்கும் போது மனைவி மரணம்", இதே போன்று கணவன் மீது சந்தேகம் கொண்ட மனைவி, கணவனோடு சண்டை அல்லது விவாகரத்து போன்றவைகளை செய்திகளில் வாசிக்கிறோம்.
இப்படிப்பட்ட சூழலை அல்லாஹ் கணவன்மார்களுக்கு குர்ஆன் வசனத்தில் உருவாக்கித் தருகின்றான். இன்னும் ஆழமாக இவ்வசனத்தை ஆய்வு செய்தால், பெண் விடுதலைக்கு எதிரான பல கருத்துக்களை காணலாம்.
மூன்றாவதாக, குர்ஆன் 4:34ன் படி, அல்லாஹ் ஆண்களை பெண்களை விட உயர்த்தி வைத்திருக்கின்றான், ஏன் என்று கேட்டால், இதே வசனத்தில் பதில் இருக்கிறது. அதாவது:
- ஆண்கள் "தங்கள் சொத்துக்களிலிருந்து" பெண்களுக்கு செலழிக்கிறார்கள்.
- ஆண்கள் தான் பெண்களை நிர்வாகிக்கிறார்கள், நிர்வாகிக்கவேண்டும்.
- எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். இப்படி நடக்காத பெண்கள் கெட்ட ஒழுக்கமுள்ள பெண்கள்.
- ஒழுக்கமுள்ள பெண்கள் கணவன் இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்.
இந்த 4வது பாயிண்டில் என்ன அல்லாஹ் சொல்கிறான் என்று புரிகின்றதா சகோதரி உங்களுக்கு? கணவன் இல்லாத நேரத்தில், பெண்கள் வேறு ஆண்களோடு கள்ளத்தொடர்பு அல்லது விபச்சாரம் செய்யாமல் இருக்கவேண்டும் என்றுச் சொல்கிறான் அல்லாஹ். இது சரியான ஒரு கோட்பாடு தான், இதனை நாம் ஆதரிக்கவேண்டும். ஆனால், இதே கட்டளை ஆண்களுக்கும் அல்லாஹ் கொடுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? உன் மனைவியை மட்டும் நீ நேசி, வேறு பெண்ணை தொடாதே! போரில் கிடைத்த அடிமைப்பெண்களோடு திருமணம் செய்யாமல், விபச்சாரம் செய்யாதே. ஆண்களே, பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று ஆண்களுக்கும் ஒரு வரியை அல்லாஹ் எழுதியிருந்தால், அல்லாஹ்வையும், குர்ஆனையும் தலையில் வைத்து உலக மக்கள் கொண்டாடியிருந்திருப்பார்களே!
முஸ்லிம் அறிஞரக்ள் வஞ்சகமான மொழியாக்கங்கள்: குர்ஆனுக்கு எதிரான பொருள் கூறுதல்
வசனம் தெளிவாகச் சொல்கிறது, மனைவியை நீ அடிக்கலாம், அதுவும் எப்போது? உனக்கு மாறு செய்வாள் என்று நீ சந்தேகப்பட்டால் அவளை அடிக்கலாம், ஆனால் உடனே அடிக்காமல், கீழ்கண்ட வரிசையை பின்பற்ற வேண்டும்.
- முதலாவது, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்
- இரண்டாவது, அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;
- மூன்றாவதாக, மேற்கண்ட இரண்டுமே பயனளிக்கவில்லையென்றால், அவர்களை அடியுங்கள்.
முதல் இரண்டு யுக்திகளும் வேலை செய்யவில்லையானால், அடிக்கும் படி குர்ஆன் சொல்கிறது. மேற்கண்ட நிலையில் ஒரு முஸ்லிம் ஆணின் மனநிலை எப்படி இருக்கும்?
மனைவி மாறுசெய்யப்போகிறாள் என சந்தேகித்தால், ஒரு முஸ்லிம் ஆண் குர்ஆன் சொல்வது போன்று, முதலாவது உபதேசம் செய்யவேண்டும், இங்கு தோல்வி அடைந்தால், படுக்கையிலிருந்து விலக்கவேண்டும், இதுவும் பயனளிக்கவில்லையென்றால், அடிக்கவேண்டும். இது தான் குர்ஆன் சொல்லும் வழி. முதல் இரண்டு வழிமுறைகளில் தோல்வி அடைந்த ஒரு ஆண், உச்ச கோபத்தில் இருப்பான், இந்த நேரத்தில் "ஒரு சின்ன குச்சியை எடுத்து, லேசாக மனைவியை அடிக்கவேண்டும்" என்று தமிழ் குர்ஆன் மொழியாக்கம் செய்தவர்கள் எழுதுகிறார்கள். இது வேடிக்கையாக உள்ளதல்லவா? இது சாத்தியமா? இது நடைமுறைக்கு ஏற்புடையதாக இருக்குமா? என்று சிந்தித்துப் பாருங்கள். குர்ஆன் சொல்லாத ஒன்றை இவர்கள் எழுதுகிறார்கள், நடைமுறையில் சாத்தியமில்லாதவற்றை எழுதியுள்ளார்கள். உலகத்திலேயே மனைவியை அடிக்கச் சொல்கின்ற ஒரே வேத நூல் குர்ஆன் ஆகத்தான் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
சகோதரி சபரிமாலா அவர்களுக்கு கேள்விகள்:
- பெண் விடுதலை, பெண்கள் பாதுகாப்பு என்ற நல்ல போராட்டத்தை தொடங்கியுள்ள சகோதரியே, இந்த வசனத்தின் படி, பெண்களை அடிக்க முஸ்லிம் ஆண்களுக்கு குர்ஆன் கொடுத்த இந்த சலுகையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
- தினம் ஒரு நிமிடம் திருக்குர்ஆனுடன் என்ற தொடரில், குர்ஆன் 4:34ஐ நீங்கள் தொட்டு பேசுவீர்களா?
- இது பெண்கள் கள்ளத் தொடர்பு கொண்டால் தான் குர்ஆன் அடிக்கச் சொல்கிறது என்று நினைத்தாலும் (இவ்வசனத்தில் இதற்கு வாய்ப்பும் உள்ளது), முஸ்லிம் அறிஞர்கள் இதுவும் ஒரு காரணம் தான், மற்ற காரணத்திற்காகவும் அடிக்கலாம் என்று தான் விளக்கம் அளிக்கிறார்கள். சாதாரண விவரங்களுக்காக என்று நினைத்தாலும், கள்ளத்தொடர்பு காரணமாக நினைத்தாலும், பெண்களை அடிக்க அனுமதி கொடுப்பது சரியா? உங்கள் கருத்தென்ன சகோதரியே!
- சாதாரண காரணங்களுக்காக ஆண்கள் பெண்களை அடிப்பது பற்றி உங்கள் கருத்தென்ன?
- பெண்களுக்கு பாதுகாப்பு சமுதாயத்தில் மட்டுமல்ல, குடும்பத்திலும் தேவை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? அப்படியென்றால், குர்ஆன் 4:34ன் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?
- கடைசியாக ஒரு கேள்வி, பெண்களை அடிக்கச் சொன்ன குர்ஆனை இனி நீங்கள் படிப்பீர்களா? அதனை தூக்கிப்பிடிப்பீர்களா? உங்கள் பெண் விடுதலை, பெண் பாதுகாப்பு வெறும் மற்ற பெண்களுக்கு மட்டும் தானா? முஸ்லிம் பெண்களுக்கில்லையா?
இவ்வசனம் பற்றி மேலதிக விளக்கம் தேவைப்பட்டால், இன்னொரு கட்டுரையில் விளக்குவேன்.
அடுத்த கட்டுரையில் பெண்கள் பற்றிய இன்னொரு குர்ஆன் வசனத்தை ஆய்வு செய்வோம்...
தேதி: 14th Jan 2022
சகோதரி சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்கள்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/sabarimala/sabarimala_quran_4_34.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக