1. இப்புத்தகத்தின் நோக்கமென்ன? இன்னொரு குர்ஆன் மொழியாக்கமா?
இதனை ஒரு புத்தகம் என்றுச் சொல்வதைவிட, பல புத்தகங்களில் தொகுப்பு அல்லது களஞ்சியம் என்றுச் சொல்லலாம். குர்ஆன் சம்மந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில், குர்ஆனை ஆழமாக அறிந்துக்கொள்ளவேண்டும், ஆய்வு செய்யவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்காக இது எழுதப்பட்டுள்ளது. இது இன்னொரு புது குர்ஆன் தமிழாக்கமல்ல.
1.1. இக்களஞ்சியத்தின் சிறப்புக்கள்
இது ஒரு புத்தகமல்ல, இது குர்ஆன் களஞ்சியம் ஆகும். ஆங்கிலத்தில் ஸ்டடி பைபிள்(Study Bible) உள்ளது போன்று, இது "ஸ்டடி குர்ஆன் (Study Quran)" என்றுச் சொல்லலாம். இந்த புத்தகத்தை பயன்படுத்தும் வாசகருக்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்பதை காண்போம்.
1.2. திருக்குர்ஆன் விளக்கவுரை (தஃப்ஸீர்)
முதலாவதாக, இந்த புத்தகத்தின் முதன்மையான தனிச்சிறப்பு, இது குர்ஆனுக்கு எழுதப்பட்ட 'விளக்கவுரையாகும் (Quran Commentary - தஃப்ஸீர்)'. தமிழ் குர்ஆனுக்கு சிலர் தஃப்ஸீர்களை எழுதியுள்ளார்கள், ஆனால், இந்த தஃப்ஸீர் சிறிது வித்தியாசமானது.
இந்த விளக்கவுரையை எழுதுவது, ஒரு கிறிஸ்தவர் (முன்னாள் முஸ்லிம்) ஆவார். எனவே, ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் தமிழில் எழுதப்படும் முதலாவது தஃப்ஸீராக இது இருக்கும்.
ஒரு சராசரி சாதாரண முஸ்லிமுக்குத் தெரியாத, அவர்களது புத்தகங்களிலும் எழுதப்படாத மற்றும் அவர்களின் இமாம்கள் விளக்க மறுக்கும் ஆய்வுகள், விளக்கங்கள் இந்த திருக்குர்ஆன் களஞ்சியத்தில் கிடைக்கும் என்பதால், இதனை முஸ்லிம்கள் கட்டாயம் படிக்கவேண்டும். இந்த விளக்கவுரையில் ஐந்துக்கும் அதிகமான குர்ஆன் தமிழாக்கங்கள், மேலும் சில ஆங்கில மொழியாக்கங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது, மேலும், சன்னி முஸ்லிம் பிரிவினரின் 6 ஹதீஸ் தொகுப்புக்களிலிருந்து பின்னணிகள், விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1.3. குர்ஆனை ஒட்டிய முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு
குர்ஆனை கற்கும் போது, முஹம்மதுவை கற்காமல் விடமுடியாது, அப்படி விட்டால், குர்ஆன் பற்றிய அறிவு முழுமை பெறாது. இந்த களஞ்சியத்தில் தேவையான இடங்களில் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறும் மேற்கோள் காட்டப்பட்டு இருக்கும். இதனால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்றுச் சொல்வது போன்று, குர்ஆனை கற்கும் போதே, முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றையும் கற்றுக்கொள்ளமுடியும். குர்ஆனை கற்க ஒரு புத்தகமும், முஹம்மதுவின் வாழ்க்கையை அறிய இன்னொரு புத்தகமும் நமக்கு தேவைப்படாது.
1.4. முந்தைய வேதங்களோடு ஒப்பிடுதல்
பெரும்பான்மையான குர்ஆன் விளக்கவுரைகளில் முந்தைய வேதங்களிலிருந்து ஒருசில வசனங்களை மட்டுமே மேற்கோள் காட்டியிருப்பார்கள், இதனால் முஸ்லிம்களுக்கு முந்தைய நபிமார்கள், வேத நிகழ்ச்சிகள் பற்றிய தேவையான மற்றும் ஆழமான அறிவு கிடைப்பதில்லை.
இக்களஞ்சியத்தின் ஒரு தனிச்சிறப்பு என்னவென்றால், தேவைப்படும் இடங்களில் முந்தைய வேதங்களிலிருந்து அதிகபடியான வசனங்கள் மேற்கோள் காட்டப்படும். இது முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு அம்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதுமட்டுமல்லாமல், முந்தைய வேதங்களோடு குர்ஆன் எங்கேயெல்லாம் ஒற்றுமையாக வழிமொழிகிறதென்றும், எங்கேயெல்லாம் முந்தைய வேதங்களின் நிகழ்ச்சிகளோடு முரண்படுகின்றது என்ற ஆய்வுகளும் விவரங்களும் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த களஞ்சியம் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஒரு கையேடாக இருக்கும்.
1.5. குர்ஆன் வசனங்களின் பின்னணி
இந்த விளக்கவுரையில் முடிந்த அளவிற்கு குர்ஆன் வசனங்களின் பின்னணி விவரங்கள் கொடுக்கப்படும். ஹதீஸ்களிலிருந்தும், இஸ்லாமிய சரித்திர நூல்களிலிருந்தும், முந்தைய வேதங்களிலிருந்தும் வசன பின்னணிகள் கொடுக்கப்படும். இது பல தமிழ் விளக்கவுரைகளிலும் காணப்படுவதில்லை. அதாவது சில விளக்கவுரைகளில் ஒவ்வொரு அத்தியாயத்தின் பின்னணி மட்டும் கொடுக்கப்பட்டு இருக்குமே ஒழிய, பெரும்பான்மையான அனைத்து வசனங்களுக்கும் கொடுக்கப்பட்டு இருக்காது, எனவே குர்ஆனை அனேகர் புரிந்துக்கொள்வதில்லை, இந்த குறையை நீக்கும் வண்ணமாக இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வேதகால நிகழ்ச்சிகள், குர்ஆன் நிகழ்ச்சிகள் நடந்த இடங்கள் போன்றவற்றை அட்டவணைகள் மூலமாக, வரைபடங்கள் மூலமாக விளக்கப்பட்டு இருக்கும்.
1.6. மூலக்குர்ஆன் கையெழுத்துப் பிரதிகளின் ஆய்வுகளும் விளக்கங்களும்
'ரிஷி மூலம் நதி மூலம் பார்க்கக்கூடாது' என்பார்கள், இதன் பொருள் என்ன? ரிஷிகள் எழுதிய புத்தகங்கள் புராணங்கள் மிகவும் புகழ்பெற்றவைகளாக இருந்தாலும், அவர்களுடைய சரித்திரத்தை பார்த்தால், அவர்கள் மிகவும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்களாகவோ, அல்லது தீயவர்களாகவோ இருக்கக்கூடும், ஆனால், அவர்கள் நல்லவர்களாக மாறி மிகப்பெரிய நல்ல புத்தகங்களை எழுதியிருப்பார்கள். இதே போன்று தான் நதிகள் தோன்றும் இடங்கள் மிகவும் அற்பமாக இருக்கும், ஆனால் அவைகள் வரும் இடங்களில் பல குறுந்நதிகள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய நதியாக மாறிவரும். தொடக்கம் அற்பமாக இருக்கும், இதனால் நதியின் தொடக்கம் பற்றி கவனிக்கவேண்டாம், முடிவு பற்றி மட்டுமே கவனிக்கவேண்டும் என்றுச் சொல்வதற்காகவே, ரிஷி மூலம், நதி மூலம் பார்க்கவேண்டாம் என்பார்கள்.
இதே போன்று தெரிந்தோ தெரியாமலோ முஸ்லிம்கள் "குர்ஆன் மூலம் பார்க்கவேண்டாம்" என்ற கண்ணோட்டத்தில் இருந்துவிடுகிறார்கள். ஆனால், நம்மிடம் குர்ஆன் எப்படி வந்தது, அதன் சரித்திரம் என்ன? அரபி மூல குர்ஆன்கள் இன்று நம்மிடம் எத்தனையுள்ளன? அவைகளில் இருக்கும் வித்தியாசங்கள் என்ன? போன்றவற்றை ஆராய்ந்து பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சாதாரண மக்கள் கூட குர்ஆன் பற்றிய ஆழமான ஆய்வுகளை சுலபமாக புரிந்துக்கொள்ளும் வகையில் இக்களஞ்சியத்தில் விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
1.7. குர்ஆன் வரைபடங்கள், கால அட்டவணைகள் மேலதிக விளக்கங்கள்
குர்ஆன் இன்றிலிருந்து 1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகள் பற்றி எழுதப்பட்ட நூல், இன்று அந்நிகழ்ச்சிகளை, இடங்களை புரிந்துக்கொள்வதற்கு பல அட்டவணைகள், அக்கால நலப்படங்கள், வரைப்படங்கள் தேவையாக உள்ளன. எனவே, இந்த பகுதியில் பல வரைபடங்கள் மூலமாக குர்ஆன் விளக்கப்படுகின்றது. இதுமட்டுமல்ல, குர்ஆனில் முந்தைய வேதகால நிகழ்ச்சிகளும் விளக்கப்பட்டுள்ளன. அந்நிகழ்ச்சிகள் குர்ஆனுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளாகும், எனவே, அவைகள் பற்றிய வரைபடங்கள் அந்நிகழ்ச்சிகளை நன்கு புரிந்துக்கொள்ள உதவும்.
மக்காவிற்கும், மதினாவிற்கும் இடையே எத்தனை கிலோ மீட்டர்கள் தூரமுள்ளது, அரேபியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள இடங்கள் என்னென்ன? குர்ஆனில் வரும் நிகழ்ச்சிகள் நடந்த இடங்கள் யாவை? உதாரணத்திற்கு: பத்ரூ என்ற இடம் எங்கேயுள்ளது, மதினாவிற்கு எந்த திசையில் அது உள்ளது? போன்ற அனைத்து விவரங்களும் வரைபடங்கள் மூலமாக விளக்கப்பட்டுள்ளது.
1.8. அத்தியாய சுருக்கம்
ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்தில், அவ்வத்தியாயத்தில் வரும் அனைத்து விவரங்களின் தலைப்புக்கள் கொடுக்கப்படும், இதனால் முழு அத்தியாயத்தை படிப்பதற்கு முன்பாக, அதன் சுருக்கத்தை அறிந்துக்கொள்ளலாம்.
1.9. குர்ஆன் பற்றிய சந்தேகங்களும், கேள்விகளும் பதில்களும்
முஸ்லிம்களுக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி குர்ஆன் பற்றி அனேக கேள்விகள் இருக்கின்றன, அவைகளுக்கான விளக்கங்களும் இந்த களஞ்சியத்தில் காண்போம்.
ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அல்லது இஸ்லாமை தழுவி பல ஆண்டுகளாகியிருந்தாலும், பலருக்கு குர்ஆன் பற்றி பல கேள்விகள் சந்தேகங்கள் இருக்கும், அவைகளை வெளியே கேட்கவும், பதில்களைப் பெறவும் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை அல்லது அனேக நேரங்களில் 'மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ?' என்ற தயக்கமும் இதற்கு காரணமாக இருக்கும். எனவே இந்த களஞ்சியத்தில் அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகுந்த இடத்தில் பதில்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
1.10. வண்ணத்திருக்குர்ஆன்
இந்த திருக்குர்ஆன் களஞ்சியத்தின் இன்னொரு சிறப்பம்சம், வண்ணத்திருக்குர்ஆன் ஆகும்.
இது என்ன வண்ணத் திருக்குர்ஆன்? குர்ஆனில் மனித வார்த்தைகள் எவை, மற்றும் அல்லாஹ்வின் வார்த்தைகள் எவை என்பதை வேறுபிரித்து காட்டியுள்ளோம். குர்ஆனின் வசனங்களை ஆழமாக கற்றுக்கொள்வதற்காக, முழு குர்ஆனிலும் எங்கேயெல்லாம் "அல்லாஹ் அல்லாமல் மற்றவர்கள் பேசியுள்ளார்களோ, அவைகளை அடையாளமிட்டு குறிப்பு கொடுக்கப்பட்டு இருக்கும்". இதனால் இன்னும் சுலபமாக குர்ஆன் புரியும்.
குர்ஆன் என்பது 100% அல்லாஹ்வின் வார்த்தை என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். குர்ஆனை ஒரு வகையில் பார்த்தால், இது உண்மையென்றுத் தோன்றும். ஆனால், குர்ஆனை படிக்கும் போது, பல இடங்களில் மனிதர்களின் பேச்சுக்கள், கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள், விவாதங்கள் காணப்படும்.
சில உதாரணங்களை இங்கு தருகிறேன், அப்போது தான் உங்களுக்கு இது புரியும்.
ஜின்களின் பேச்சுக்கள்:
கீழ்கண்ட வசனத்தில் பேசுவது யார்? ஜின்கள். இந்த வசனத்தை அல்லாஹ் இறக்கியிருந்தாலும், அந்த வார்த்தைகளை சொல்பவர்கள் ஜின்கள் தானே! முதல் வக்கியம் எப்படி தொடங்குகிறது என்று பாருங்கள், "(ஜின்கள்) கூறினார்கள்" என்று தொடங்குவதிலிருந்து ஜின்கள் இவ்வார்த்தைகளை பேசுகிறார்கள் என்று புரிகின்றதல்லவா!
குர்ஆன் 46:30 (ஜின்கள்) கூறினார்கள்; "எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) ´வழி´ காட்டுகின்றது.
நோவாவின் பேச்சு:
இந்த வசனத்தில் பேசுபவர் நபி நோவா ஆவார். இந்த வசனத்தில் "என்று கூறினார்" என்பது தான் அல்லாஹ்வின் வார்த்தைகள், மீதமுள்ளது நோவா தம் மக்களுக்கு எடுத்துச் சொன்ன செய்தியாகும்.
குர்ஆன் 71:2 "என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்" என்று கூறினார்.
மக்களின் பேச்சு:
கீழ்கண்ட வசனங்கள் குர்ஆனில் இருந்தாலும், இங்கு பேசுபவர்கள் யார்? நம்பிக்கையில்லாத மக்கள் பேசுகிறார்கள். அல்லாஹ்வே தன் வசனங்களை 'சூனியம் என்றோ, இவைகள் மனித வார்த்தைகள்' என்று சொல்லிக்கொள்வானா? சிந்தித்துப் பாருங்கள்?
குர்ஆன் 74:24, 25 அப்பால் அவன் கூறினான்: "இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை. "இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை" (என்றும் கூறினான்.)
குர்ஆன் 75:6 "கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
குர்ஆன் 23:25"இவர் ஒரு பைத்தியக்கார மனிதரேயன்றி வேறில்லை எனவே இவருடன் நீங்கள் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்" (எனவும் கூறினர்).
தன்னுடைய இறைத்தூதரை அல்லாஹ்வே "இவர் ஒரு பைத்தியக்காரர்" என்றுச் சொல்வானா? இல்லையல்லவா? இவைகள் மனிதர்கள் பேச்சுக்கள் தானே! அதுவும் இஸ்லாமை நம்பாத மக்களின் பேச்சுக்கள் என்று அல்லாஹ்வே சொல்கிறான். இவைகளை "வண்ணத் திருக்குர்ஆன் தலைப்பில் இக்களஞ்சியத்தில் சுட்டிக்காட்டுகிறோம்"
இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஸூராவிலும், எத்தனை வசனங்களில் அல்லாஹ்வின் வார்த்தைகள், எத்தனை வசனங்களில் மற்றவர்களின் வார்த்தைகள் உள்ளன என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு இருக்கும்.
இன்னும் பல விவரங்களோடு இந்த திருக்குர்ஆன் களஞ்சியம் தொகுக்கப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் களஞ்சியம் - பொருளடக்கம்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/study_quran/qw_intro_purpose.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக