சகோதரர் பைசல் அவர்களின் சாட்சி
Testimony of Brother Faisal
நான் ஒரு தூரக் கிழக்கு நாட்டில் பிறந்தேன். இஸ்லாமிய நம்பிக்கையில் நான் வளர்க்கப்பட்டேன், மற்றும் இஸ்லாமை கடைபிடிப்பவனாக இருந்தேன்.
நான் பல்கலைக் கழகத்தில் 2ம் ஆண்டின் கடைசி கால கட்டத்தில் இருந்த போது அந்த சம்பவம் ஆரம்பித்தது. நான் அயல் நாட்டில் படிப்பைத் தொடர்ந்தேன். நான் மதம் மாறுவேன் என்று இம்மியளவு கூட எண்ணம் கொண்டிருக்க வில்லை. கிறிஸ்தவம் தான் இறைவனின் சரியான மார்க்கமாக இருக்கும் என்று கனவில் கூட நான் கற்பனை செய்து பார்க்கவில்லை.
நான் சில காலம் கிறிஸ்தவ சித்தாந்தத்தை (Christian Theology) கற்றேன். அதன் மீது எனக்கிருந்த காழ்புணர்ச்சிக் காரணமாக, எனக்கு வரும் சந்தேகங்களுக்கு விளக்கமளியுங்கள் என்று கிறிஸ்தவ நண்பர்களிடம் ஒரு முறையும் கேட்டதில்லை. இது சமய விவாதங்களில் நான் கலந்து கொள்ளும் வரை நீடித்தது. சமய விவாதங்களில் குறைந்துக் கொண்டே வந்துக்கொண்டு இருந்த என் விருப்பம் திடீரென்று தூண்டிவிடப்பட்டது. இந்த விவாதத்தில் ஒருவரின் நட்பு கிட்டியது. அவர் என்னை ஒரு அரேபிய பாதிரியாரைச் சந்திக்கச் சொன்னார்.
நான் அந்த அரேபிய பாதிரியாரை முதன் முதலில் சந்தித்த வேளையில் உண்மையிலேயே நான் அவரை சந்தேக கண்ணொட்டத்திலேயே கண்டேன். எனினும் நான் என் மத நம்பிக்கையை அவரிடம் நிருபிக்க வேண்டும் என்ற முடிவுடன் அவருடன் விவாதித்தேன்.
இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தைப் பற்றி நாங்கள் பல காரியங்களை விவாதித்தோம். நான் பல காரியங்களைக் குறித்துத் தீவிரமாய் சிந்திக்க ஆரம்பித்தேன். எங்கள் விவாதம் நீடிக்க நீடிக்க பல கேள்விகள் என் உள்ளத்தில் எழுந்தன. இஸ்லாமில் நாம் மீட்கப்படுவதற்கு உத்திரவாதம் ஏதேனும் உண்டா? மனிதன் படைக்கப்பட்டது இறைவனுக்கு அடிமையாக மட்டும் இருப்பதற்காகவா? அல்லது தன்னை படைத்தவரோடு நல்ல உறவை வளர்த்துக்கொண்டு வாழ்வதற்காகவா? இறைவன் ஆதாமின் கீழ்படியாமையை மன்னித்துவிட்டான் என்று குர்ஆன் கூறினால், ஏன் அவர்களை இறைவன் பரலோகத்தில் மறுபடியும் சேர்த்துக் கொள்ளவில்லை?
பைபிள் இறைவனால் தரப்பட்ட வேதம் என்பதை நிருபிப்பதற்கு அதனிடம் அதிகார பூர்வமான ஆதாரங்கள் உள்ளன. இறைவனேயன்றி வேறு மனிதர்களின் உதவியில்லாமல் அந்த அதிகாரபூர்வமான ஆதாரங்களை சோதித்துப் பார்க்கும் போது என் கண்களை நானே நம்பமுடியவில்லை. இந்த விவரங்கள் என்னை அதிகமாக ஆட்கொண்டது. இதனால், அடுத்த சில மாதங்களுக்கு குர்ஆனையும் பைபிளையும் மாத்திரம் நான் படித்தேன்.
இக்கேள்விகள் எனது சிந்தனையை விடாமல் தொடர்ந்து வாட்டிக்கொண்டே இருந்தன. மேலும் அதிகமான கிறிஸ்தவ நண்பர்களின் நட்பு கிடைத்தபோது, அவர்கள் உண்மையிலேயே முகம் மலர்ந்து கரிசணையோடு பழகுவதைக் கண்டேன். ஆரம்பத்தில் அவர்கள் நேர்மையில் சந்தேகங் கொண்டேன். என்னை மதம் மாற்றுவதற்காகவே அவர்கள் என்னிடம் அன்போடு பழகுகிறார்கள் என்று தவறாகக் கருதினேன்.
அவர்கள் உண்மையிலேயே என்னை ஒரு சக மனிதனாக கருதினார்கள். மதம் மாற்றும் எண்ணம் கொண்டிராமல், நேர்மையுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதை நான் பிறகு கண்டுக்கொண்டேன். கிறிஸ்தவத்தை இன்னும் ஆழமாக அறிய ஆரம்பித்தேன், மற்றும் கிறிஸ்தவத்தை இஸ்லாத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.
என் தனிப்பட்ட வாழ்க்கையை கவனிக்கும் போது, நான் ஆன்மீக வாழ்க்கையில் உடைந்தவனாக காணப்பட்டேன். நான் அதிகமாக சந்தேகப்பட்டேன், அனேக முறை இறைவனிடம் வழிகாட்டுதலுக்காக மன்றாடினேன். சில சமயங்களில் பைபிள் வசனங்களைத் தியானிக்கும் போது, அவைகள் என் உள்ளத்தில் ஆழமாக பதிந்துவிடுகின்றன, அப்படிப்பட்ட நேரங்களில் ஆண்டவரே நேரடியாக என்னை வழி நடத்துவது போல் உணர்ந்தேன்.
நண்பரோடு நான் ஆலயத்திற்குச் செல்லும்போது அதிகமான விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். வாரா வாரம் ஆலயத்திற்குச் செல்லத் தூண்டும் வகையில் ஏதோ ஓர் ஈர்ப்பு ஆலயத்திற்கு செல்வதில் இருப்பதாக உணர்ந்தேன்.
ஒரு காலக் கட்டத்தில், என்னுடைய ஆராய்ச்சியைக் கைவிடும் சூழ்நிலை ஏற்பட்டது. அது கல்விப் பருவம் முடியும் தருவாய். நான் நண்பர்களோடு சுற்றுலா மேற் கொள்ளத் தீர்மானித்தேன். ஒவ்வொரு மாலையிலும் நண்பர்கள் வேத தியானத்தில் ஈடுபடுவார்கள். நான் ஒரு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கெண்டிருப்பேன்.
அவர்கள் வெவ்வெறு பின்னணியைக் கொண்டிருந்தாலும், வெவ்வேறு குணங்களை உடையவர்களாக இருந்தாலும், மிக ஒற்றுமையாக பழகுகிறார்கள் என்பதை என்னால் காணமுடிந்தது. நான் கிறிஸ்தவத்தைப் பற்றி முன்பு கற்றறிந்ததை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நான் செய்ய வேண்டியது இன்னதென்று இப்போது அறிந்து கொண்டேன்.
ஆனால் தயக்கம் என்னைச் சூழ்ந்து கொண்டது. பலருடைய பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டுமே என்று பயந்தேன். இருந்த போதிலும் கடைசியாக ஆண்டவருடைய உண்மையான வழியைப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளேன் என்பதை உணர்ந்தேன்.
என் உல்லாசப் பயணத்தின் இறுதி நாளில், நீண்ட நேர தியானமும் ஜெபமும் செய்த பிறகு, கிறிஸ்து ஒருவரால் மாத்திரமே இரட்சிப்பு உண்டு என்று அறிக்கை செய்தேன்.
இப்போது நான்கு மாதங்கள் கடந்து விட்டது. என் கல்விப் பயணத்தை முடித்து தாயகம் திரும்பிய பிறகு, பிற முஸ்லீம்களுக்குக் கிறிஸ்துவைப் பற்றியும், பரம அன்பைப் பற்றியும் அறிவிக்க சித்தமாயிருக்கிறேன். முஸ்லீம் சகோதர சகோதரிகளே, காழ்ப்புணர்ச்சியைப் புறம்பே ஒதுக்கிப் போட்டு, கிறிஸ்துவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொண்ட எங்கள் சாட்சிகளுக்குச் செவி சாயுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். இறுதியாக முஸ்லிம் சகோதரர்களிடத்தில் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன் "மரித்த பிறகு நீங்கள் எங்கே போவீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?"
இவ்வுலக வாழ்வு தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். என் பாவங்களுக்காக கிறிஸ்து மரித்ததால், பரலோக வாசல் எனக்குத் திறந்திருக்கிறது என்று முழு மனதோடும், முழு சிந்தையோடும், முழு ஆத்துமாவோடும் விசுவாசிக்கிறேன், மற்றும் அவரே தேவகுமாரன் என்றும் விசுவாசிக்கிறேன்.
உங்களோடு எப்போதும் என் ஜெபங்கள் இருக்கும்.
இப்படிக்கு
பைசல்
பைசல்
© Answering Islam, 1999 - 2009. All rights reserved.
English Source: http://www.answering-islam.org/Testimonies/faisal.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக