முந்தைய கட்டுரைகள்:
- சவக்கடல் சுருள்கள் அறிமுகம்
- சவக்கடல் சுருள்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
- சவக்கடல் சுருள்களின் காலவரிசை 1947 லிருந்து 1967 வரை
- சவக்கடல் குகைகள் 1-3ல் கிடைத்த சுருள்கள்
- சவக்கடல் குகைகள் 4-5ல் கிடைத்த சுருள்கள்
- சவக்கடல் குகைகள் 6-11ல் கிடைத்த சுருள்கள்
- சவக்கடல் சுருள்கள் – கிறிஸ்தவத்திற்கு அமிர்தமா அல்லது நஞ்சா?
- சவக்கடல் சுருள்கள் – இஸ்லாத்திற்கு வரமா? அல்லது சாபமா?
நான் இந்த சவக்கடல் சுருள்கள் பற்றிய விவரங்களை தொடர்களாக எழுதுவதற்கு காரணம், நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர் திரு பிஜே அவர்கள் ஆவார்கள். இவர் தம்முடைய குர்-ஆன் தமிழாக்கத்தின் 271ம் விளக்கத்தில், சவக்கடல் சுருள்கள் பற்றி எழுதும் போது, பேராசிரியர் ஐஸன்மேன் என்பவரின் ஆய்வு பற்றி மேற்கோள் காட்டி விமர்சித்துள்ளார்.
பிஜேயின் விளக்கம் 271ஐ படிக்க இங்கு சொடுக்கவும்.
நேரடியாக ஒரு கட்டுரையில் பிஜே அவர்களுக்கு பதில் எழுதுவதற்கு பதிலாக, கீழ்கண்ட மூன்று பிரிவுகளில் நான் பதிலை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
முதலாவதாக சவக்கடல் சுருள்கள் பற்றிய விளக்கம் (இதுவரை எழுதிய 8 தொடர்கள்)
இரண்டாவதாக, ஐஸன்மேன் அவர்களின் ஊகக்கொள்கை பற்றிய விளக்கம் (இந்த தொடர்)
மூன்றாவதாக, பிஜே அவர்களுக்கு மறுப்பு (அடுத்த தொடர்)
பிஜே அவர்கள் ஐஸன்மேனின் ஆய்வை முழுவதுமாக தெரிந்துக்கொள்ளாமல், அவரது ஊகக்கொள்கையை (Theory) வம்புக்கு இழுத்தபடியினால், இஸ்லாமுக்கு மிகப்பெரிய கெடுதியை செய்துள்ளார். அதனை இத்தொடர் கட்டுரைகளை படிக்கும் போது புரிந்துக்கொள்ளலாம். இப்போது ஐஸன்மேனின் ஊகக்கொள்கையை சுருக்கமாக காண்போம்.
பேராசிரியர் ராபர்ட் ஐஸன்மேன் (Prof. Robert H Eisenman):
இவர் கலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிடியின் தலைவராக இருக்கிறார். இவர் மத்திய கிழக்கு மதங்கள், அகழ்வாராய்ச்சி, மற்றும் இஸ்லாமிய சட்டம் பற்றிய துறையின் பேராசிரியராக இருக்கிறார். இவரைப் பற்றிய இதர விவரங்களை அறிய இந்த விக்கிபீடியா தொடுப்பை சொடுக்குங்கள்.
சவக்கடல் சுருள்களும் ஐஸன்மேனும்:
இவர் 1980/90களில் சவக்கடல் சுருள்கள் அனைத்தும் மக்களின் முன்னிலையில் கொண்டுவரப்படவேண்டும் என்று குரல் எழுப்பினார். சவக்கடல் சுருள்களை ஆய்வு செய்வதாகச் சொல்லி, ஒரு புதிய ஊகக்கொள்கையை (Theory) உலகிற்கு அறிமுகம் செய்தார். சவக்கடல் சுருள்களில் 'பைபிள் சம்மந்தமில்லாத இதர ஆவணங்களின்' காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்று பாலியோகிராபி என்ற முறையின் படி கண்டுபிடித்திருந்தனர். அதனை இவர் விமர்சித்து, ரேடியோ கார்பன் முறைப்படி மறுபடியும் காலத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவரது கட்டாயத்தினால், முதன் முதலாக சவக்கடல் சுருள்கள் ரேடியோ கார்பன் 14ன் படி ஆய்வு செய்து காலத்தை கணக்கிட்டார்கள். இவர் "James the Brother of Jesus: The Key to Unlocking the Secrets of early Christianity and the Dead Sea Scrolls " என்ற புத்தகத்தை 1997ல் எழுதினார். அவர் தன்னுடைய புதிய கோட்பாட்டை இப்புத்தகத்தில் எழுதியிருந்தார்.
இவரைப் பற்றிய முன்னுரையை நான் இதோடு முடித்துக்கொள்கிறேன். இவரைப் பற்றிய இதர விவரங்களை மேலே கொடுக்கப்பட்ட விக்கிபீடியா தொடுப்பில் படிக்கலாம். இத்தொடரின் நோக்கம், இந்த ஆய்வாளரின் கோட்பாட்டை சுருக்கமாக விவரித்து, அதனை முஸ்லிம்கள் நம்புவதினால், அவர்கள் இஸ்லாமை எப்படி இடித்துப்போடுகிறார்கள் என்பதை விளக்குவது தான். இவர் எழுதிய 1000 பக்கங்கள் அடங்கிய மேற்கண்ட புத்தகத்தில் உள்ள அனைத்தையும் சொல்வது என் நோக்கமல்ல, அது தேவையும் இல்லை. எனவே, இவரது ஊகக்கொள்கையை இப்போது பார்ப்போம். இதை புரிந்துக்கொண்டால் தான், முஸ்லிம்களுக்கு கொடுக்கப்போகும் மறுப்பு புரியும்.
சவக்கடல் சுருள்கள் இரண்டு வகையான ஆவணங்களை உள்ளடக்கியது:
- பைபிள் சம்மந்தப்பட்டது (பழைய ஏற்பாட்டு புத்தகங்கள், விரிவுரைகள்) மற்றும்
- பைபிள் சம்மந்தப்படாத இதர ஆவணங்கள் (எஸ்ஸீன்ஸ் யூதர்களின் இதர மத சம்மந்தப்பட்ட புத்தகங்கள்).
பேராசிரியர் ஐஸன்மேனுக்கு பைபிள் சம்மந்தப்பட்ட சவக்கடல் சுருள்கள் பற்றி பிரச்சனையில்லை. இவரது ஆய்வு பைபிள் சம்மந்தப்படாத ஆவணங்கள் பற்றியது தான் (Sectarian documents), அதிலும் நான்காவது குகையில் கண்டுபிடிக்கப்பட்ட சில ஆவணங்கள் பற்றியது தான். இவர் சவக்கடல் சுருள்களை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அங்கத்தினர் அல்ல என்பதை மனதில் வைக்கவும். இவர் 1937ம் ஆண்டு பிறந்தார், மற்றும் சவக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலக்கட்டத்தில் (1947ம் ஆண்டு) இவர் 10 ஆண்டுகள் நிரம்பிய சிறுவன். இவர் சவக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த விவகாரத்தில் தலையிடுகிறார்.
பேராசிரியர் ஐஸன்மேனின் ஊகக்கொள்கை (கோட்பாடு):
1) செக்டேரியன் டாகுமெண்ட்ஸ் (Sectarian documents) என்றுச் சொல்லக்கூடிய ஆவணங்களின் காலமும், கும்ரான் பகுதியில் மக்கள் வாழ ஆரம்பித்த காலக்கட்டமும் கி.மு. 2ம் நூற்றாண்டு ஆகும் என்று அனைத்து ஆய்வுகளும் சொல்கின்றன (மெக்காபீன்கள் காலம்). ஆனால், ஐஸன்மேன் அவர்களோ, 'அதன் காலக்கட்டம் இயேசுவிற்கு பிறகு வந்த காலமாகும் அதாவது கி.பி. 30 லிருந்து கி.பி 70 வரையிலானது' என்றுச் சொல்கிறார்.
2) இவரது கருத்துப்படி, முதல் நூற்றாண்டில் ஒரு யூத சுதந்திர போராட்ட இயக்கமாக கிறிஸ்தவம் ஆரம்பித்தது. அதாவது ரோமர்களுக்கு எதிராக எழுந்த யூத கிளர்ச்சிக்காரர்களின் இயக்கம் தான் கிறிஸ்தவம். சிகரி (Sicarii) போன்றதொரு கிளர்ச்சிக் குழு தான் கிறிஸ்தவம் கூட என்பது இவரது கருத்து. இது ஒரு ஆன்மீக குழுவல்ல, இது ஒரு சுதந்திர போராட்டக் குழு.
3) இவரின் கருத்துப்படி, யோவான் ஸ்நானகன் தான் முதலாவதாக, இந்த யூத கிளர்ச்சிக்கு (ரோமர்களுக்கு எதிராக பேசி, போராட்டம் செய்தவர்) வித்திட்டவர்.
4) யோவான் ஸ்நானகனைத் தொடர்ந்து இயேசு அந்த யூத இயக்கத்தை நடத்திவந்தார். தேசத்துரோகி (கிளர்ச்சிக்காரர்) என்று குற்றம் சாட்டி ரோமர்கள் இயேசுவை கொன்றுவிட்டார்கள்.
5) இயேசுவிற்குப் பிறகு அவரது சகோதரர் யாக்கோபு அந்த யூத சுதந்திர போராட்டஇயக்கத்தை நடத்திவந்தார். இந்த குழுவில் இருந்த பவுலை யாக்கோபு புறக்கணித்து துரத்திவிட்டார்.
6) இயேசு தெய்வம் என்று பவுல் சொல்லி, நாட்டுக்கு சுதந்திரத்தை கொண்டுவர பாடுபட்டுக்கொண்டு இருந்த இயக்கத்தை ஆன்மீக இயக்கமாக மாற்றுகிறார் என்றுச் சொல்லி, யாக்கோபு பவுலை துரத்திவிட்டார்.
7) யாக்கோபு எருசலேம் தேவாலயத்தை கைவசப்படுத்திக் கொண்டு, அங்கு யூத மத சடங்குகளை நடத்தச் சென்றபோது, அப்போது பிரதான ஆசாரியராக இருந்த அனனஸ் (Ananus) இவரை பிடித்து, கல்லெரிய ஒப்புக்கொடுத்தார்.
8) இந்த காலக்கட்டத்தில் கும்ரான் பகுதிக்குச் சென்று தஞ்சம் அடைந்த அந்த யூத சுதந்திர இயக்கத்தின் அங்கத்தினர்கள் பதுக்கி வைத்த சுருள்கள் தான் கும்ரான் சவக்கடல் சுருள்கள்.
9) கி.பி. 68ல் ரோம படைகளால் எருசலேம் அழிக்கப்பட்ட போது இந்த கும்ரான் பகுதியில் வாழ்ந்த இவர்களும் அழிக்கப்பட்டுவிட்டனர்.
10) யூதர்களுக்கு சுதந்திரம் வாங்கித்தர போராடிய யோவான் ஸ்நானகன், இயேசு மற்றும் அவரது சகோதரர் யாக்கோபு போன்றவர்கள் உருவாக்கிய இயக்கத்தை, பவுல் ஒரு ஆன்மீக இயக்கமாக சித்தரித்து, இயேசுவை தெய்வமாக மாற்றி 'கிறிஸ்தவம்' என்ற பெயரில் அதனை மாற்றிவிட்டார்.
இவைகள் தான் பேராசிரியர் ஐஸன்மேன் அவர்கள் எழுதிய புத்தகத்தின் சுருக்கம். இந்த சுருக்கமான விவரம் நமக்கு போதும் என்று நம்புகிறேன்.
பேராசிரியர் ஐஸன்மேன், ஏன் 'சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை உறுதிப்படுத்துகின்றன என்றுச் சொன்னார்?' என்பதை இப்போது காண்போம்.
இவரின் கருத்துப்படி யாக்கோபின் போதனை பவுலின் போதனைக்கு நேர் எதிரானதாகும். இதைப் பற்றி இவர் இவ்வாறு சொல்கிறார் - "யாக்கோபின் போதனை - நம்பிக்கைக் கொண்டு நற்செயல்களைச் செய்வதினால் இரட்சிப்பு உண்டாகும் என்பதாகும். பவுலின் போதனை – கிருபையினால் இரட்சிப்பு உண்டாகும் என்பதாகும்".
பேராசிரியர் ஐஸன்மேனின் படி இஸ்லாம் மற்றும் யாக்கோபின் நம்பிக்கை எப்படி ஒத்துப்போகிறது என்பதை இந்த வீடியோவில் விளக்குகிறார் என்பதை பாருங்கள் (Youtube விடியோ).
யூத முறைமையின்படி நற்செயல்கள் செய்தால், இரட்சிப்பு அடைய முடியும் என்று யாக்கோபு கருதியதாக ஐஸன்மேன் கருதுகிறார். இது எதனை ஒத்து இருக்கிறது? இஸ்லாமை ஒத்து இருக்கிறதல்லவா என்றுச் சொல்கிறார். நல்ல செயல்களைச் செய்யுங்கள், உங்களுக்கு அல்லாஹ் சொர்க்கம் கொடுப்பான் என்பது தான் இஸ்லாமின் போதனை. பேராசிரியர் ஐஸன்மேன், தன்னுடைய மேற்கண்ட ஊகக்கொள்கையை நிருபிப்பதற்கு, இப்படி இஸ்லாமிய போதனையும், கும்ரான் பகுதியில் வாழ்ந்த யூதர்களின் போதனையும் ஒன்று தான் என்று கூறினார்.
நற்செயல்களைச் செய்யுங்கள், அது உங்களை சொர்க்கம் அடையச் செய்யும் என்ற நம்பிக்கை, இஸ்லாமுக்கும், யூதத்துக்கும் மட்டுமல்ல, உலகில் இருக்கும் அனேக மதங்களின் முக்கியமான கோட்பாடு இது தான். இந்து மதத்தில் கூட "நற்செயல்களைச் செய்யுங்கள், மோட்சம் அடைவீர்கள்" என்ற போதனை இல்லையா? அப்படியானால், யாக்கோபு என்பவரின் போதனை இந்துத்துவத்தை உறுதிச் செய்கிறது என்றுச் சொல்லலாம் அல்லவா? ஐஸன்மேன் என்ன சொல்கிறார் என்பதை சரியாக முஸ்லிம்கள் புரிந்துக்கொண்டால், 'இஸ்லாமை கும்ரான் குகைவாசிகளின் போதனை உறுதிப்படுத்துகிறது' என்ற சொற்றொடரில் உள்ள அர்த்தம் அவர்களுக்கு புரியும்.
பேராசிரியர் ஐஸன்மேன், தம்முடைய புத்தகங்களிலோ, நெர்க்கானல்களிலோ கீழ்கண்டவிதமாகச் சொல்லியுள்ளாரா?
- சவக்கடல் சுருள்களில் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு உள்ளது.
- சவக்கடல் சுருள்களில் அல்லாஹ்வின் பெயர் உள்ளது.
- இயேசு ஒரு நபி (தீர்க்கதரிசி) மட்டுமே என்று சவக்கடல் சுருள்கள் சொல்கின்றன?
- மக்காவில் உள்ள காபாவை ஆபிரகாமும் இஸ்மவேலும் சேர்த்து தான் புதுப்பித்தார்கள் (கட்டினார்கள்).
- அரேபியாவிலிருந்து வெளிப்படும் ஒரு நபிக்காக யூதர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள்
- இன்னொரு வேதத்தை யூதர்களின் தேவன் அரேபியாவில் இறக்கப்போகின்றான்.
மேற்கண்ட விதமாக பேராசிரியர் ஐஸன்மேன் கூறவில்லை, அவரால் கூறவும் முடியாது. இவர் இன்றும் நம்மிடம் உள்ளார், அவருக்கு மேற்கண்ட தெளிவான கேள்விகளை எழுதி முஸ்லிம்கள் பதிலை பெற்றுக்கொள்ளலாம்.
முதல் நூற்றாண்டின் யூதப்புரட்சிக் குழு:
ஐஸன்மேனின் புதிய கோட்பாட்டில் அனேக ஓட்டைகள் உள்ளன. சவக்கடல் சுருள்களின் ஆய்வுக் குழுவில் இடம் பெற்று இருந்த யூத, கிறிஸ்தவ மற்றும் மதசார்பற்ற அறிஞர்கள் அவருக்கு மறுப்பை அளித்துவிட்டார்கள். கும்ரான் வாசிகள் முதல் நூற்றாண்டில் உண்டான யூத சுதந்திரத்திற்காக போராடிய குழுதான், யோவான் ஸ்நானகன், இயேசு மற்றும் அவரது சகோதரர் யாக்கோபு என்பவர்கள், இந்த சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற தலைவர்கள் என்று அவர் சொன்ன கோட்பாடு, ஆதாரங்கள் இல்லாமல் துவண்டு விட்டது. இவரது இந்த புதிய கோட்பாட்டில் இருக்கும் பிழைகளை அடுத்தடுத்த கட்டுரையில் நாம் காண்போம்.
இஸ்லாமிய அறிஞர்களின் அறிவீனமான வாதத்திற்கு பதில் அளிப்பதற்காக ஜஸன்மேனின் சுருக்கமான கோட்பாட்டை நாம் இதுவரை பார்த்து இருக்கிறோம். இதன் அடிப்படையில், அடுத்த தொடரில் பிஜே அவர்களின் விமர்சனத்திற்கு பதிலையும், ஐஸன்மேனின் கருத்து மற்றும் கோட்பாடு எப்படி இஸ்லாமை இடித்துபோடப்போகிறது என்பதையும் காண்போம்.
அடிக்குறிப்புக்கள்
1) Dead Sea Scrolls: Threat to Christianity?
2) Robert Eisenman's "James the Brother of Jesus"
3) JAMES, the Brother of JESUS
தேதி:5th Nov 2016
'சவக்கடல் சுருள்கள்' பொருளடக்கம்
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/dead_sea_scrolls/dss_eisenman_theory.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக