(நல்ல கலாச்சாரமும் தீய கலாச்சாரமும்)
கலாச்சாரத்தில் நல்லது தீயது என்று ஒன்று உண்டா? எல்லா கலாச்சாரங்களையும் ஒரே மாதிரியாக மதிக்கவேண்டுமல்லவா? பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படும் கலாச்சார பழக்கங்கள் எப்படி இன்று திடீரென்று தவறாக மாறிவிடும்? நம் மூதாதையர்கள் பின்பற்றிக்கொண்டு வந்த கலாச்சார பழக்கங்களை எப்படி இன்று தவறு என்றுச் சொல்லமுடியும்?
[சௌதியிலுள்ள தம்பியிடம் இந்த தலைப்பு பற்றி உமர் உரையாடுவதை இந்த தொடரில் காணலாம். தலாக் பற்றிய இதர விவரங்களை அடுத்தடுத்த தலைப்புக்களில் காண்போம்.]
தம்பி: ஹலோ, உமரண்ணா, எப்படி இருக்கீங்க?
உமர்: ஹலோ தம்பி, நான் சுகமாக இருக்கிறேன், நீ எப்படி இருக்கிறாய்?
தம்பி: நீங்க இந்தியாவில் சுகமாக இருக்கீங்க, ஆனால், நான் சௌதியில் சுகமாக இல்லை!
உமர்: என்ன ஆச்சு? சௌதியில் ஏதாவது பிரச்சனையா?
தம்பி: சௌதியில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்தியாவில் தான் பிரச்சனை அதனால் தான் சௌதியில் நான் சுகமாக இல்லை.
உமர்: என்னடா இது! இந்தியாவில் பிரச்சனையென்றால், சௌதியில் உனக்கு தொல்லையா? புரியவில்லையே! இந்தியாவுக்கும் சௌதிக்கும் என்ன சம்மந்தம்? கொஞ்சம் புரியும் படி சொல்லு!
தம்பி: நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன். இந்திய நீதிமன்றம் ஏன் எங்கள் இஸ்லாமிய கலாச்சார விஷயங்களில் மூக்கை தேவையில்லாமல் நுழைக்கிறது? 'தலாக் (இஸ்லாமிய விவாகரத்து)' விஷயத்தில் ஏன் நீதிமன்றம் தன் எல்லையைத் தாண்டுகிறது?
உமர்: ஓ.. இது தான் விஷயமா? இதனால் தான் உனக்கு சௌதியில் சுகமில்லையா? இந்தியாவில் முஸ்லிம்களின் பொருளாதார நிலை மோசமாக இருந்தாலும், முஸ்லிம்களில் படித்தவர்களின் சதவிகிதம் குறைவாக இருந்தாலும் உனக்கு சௌதியில் பிரச்சனையில்லை! இந்திய முஸ்லிம் பெண்களுக்கு முஸ்லிம் ஆண்களால் கொடுமைகள் இழைக்கப்பட்டாலும் உனக்கு சௌதியில் பிரச்சனை இல்லை. ஆனால், தலாக் என்ற விஷயம் வந்தால் மட்டும், சௌதியில் உன்னுடைய நிம்மதி போய்விடுகிறது, சரிதானே!
தம்பி: நான் கேட்ட கேள்வி தலாக் பற்றியது. ஒரு கலாச்சரம் (மத பழக்கம்) என்று வந்தால், அதனை அம்மக்கள் பின்பற்றிப் போகட்டுமே என்று விட்டுவிடவேண்டியது தானே! அதைப் பற்றி ஏன் விவாதிக்கவேண்டும்? நீதிமன்றம் ஏன் தலையிடவேண்டும்?
உமர்: தம்பி நீ நன்றாக குழம்பியிருக்கிறாய்! அனைத்து கலாச்சாரங்களையும் அல்லது மத நம்பிக்கைகளையும் நீதிமன்றம் மதிக்கவேண்டும் மேலும் கேள்வி கேட்காமல் அனுமதிக்கவேண்டும் என்று நீ தவறாக நினைத்துவிட்டாய். அல்லது எல்லா கலாச்சாரங்களும் நல்லவைகளே என்று தவறாக நம்பியிருக்கிறாய்.
தம்பி: ஒரு நிமிஷம் இருங்க. கலாச்சாரங்கள் (மத நம்பிக்கைகள்) என்றாலே நல்லவைகள் தானே! இதில் "நல்ல கலாச்சரம் தீய கலாச்சாரம்" என்று பாகுபாடு உள்ளதா என்ன?
உமர்: அடப்பாவமே! இதுவரைக்கும் உனக்குத் தெரியாதா? நீ எவ்வளவு அறியாமையில் இருக்கிறாய் என்பது இப்போது தான் புரிகிறது. முஸ்லிம் மத நம்பிக்கையாகிய தலாக் பற்றி பிறகு பேசுவோம். உனக்கு முதலாவது 'கலாச்சாரம்' என்பதின் அடிப்படையை சொல்லவேண்டியுள்ளது, அப்போது தான் தலாக் பற்றி நாம் பேசும் போது உனக்கு சரியாக புரியும்.
தம்பி: எல்லாமே உங்களுக்கு மட்டுமே தெரியும் என்பது போல பாசாங்கு செய்யாதீங்க. உங்களுடைய மேற்கண்ட கருத்தை உங்கள் கிறிஸ்தவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், இந்துக்களும் ஏற்கமாட்டார்கள். உங்களால் ஒரு தீய கலாச்சாரத்தை உதாரணம் காட்டமுடியுமா?
உமர்: இன்னும் சில நிமிடங்களில், உலகில் நல்ல கலாச்சாரம் தீய கலாச்சாரம் என்று இரு பிரிவுகள் உள்ளது என்பதை நீ ஒப்புக்கொள்ளப்போகிறாய். இதற்கு நான் இஸ்லாமிய உதாரணத்தையே சொல்லமுடியும். முதலாவது, இஸ்லாமுக்கு வெளியே நல்ல தீய கலாச்சாரங்கள் உள்ளன என்பதை விளக்குகிறேன் கேள்.
தம்பி: ஓஹோ! இப்படியும் உள்ளதா? ஞானசிகாமணியே! உங்க கலாச்சார ஞானத்தை கொஞ்சம் அவிழ்த்துவிடுங்கள் பார்க்கலாம்.
உமர்: முதலாவது நான் இந்தியாவிற்கு வெளியேயிருந்து சில உதாரணங்களைச் சொல்கிறேன், இரண்டாவதாக இந்தியாவிற்குள் வந்து, கடைசியாக இஸ்லாமுக்குப் போவோம்.
தம்பி: ம்ம்ம் ஆரம்பியுங்க…
உமர்: கேலி செய்யாதே! இது ஒரு அடிப்படை விவரம், இதைப் பற்றி தெரிந்துக்கொள்ளாமல் நீ இருப்பது ஆச்சரியமே.
நான் உனக்கு ஒரு தொடுப்பை SMS செய்கிறேன், அதை ஓபன் செய்துக்கொள்.
கலாச்சரம் என்பது என்ன? ஆரம்ப காலத்தில் மனிதர்கள் குழுவாக வாழ்ந்த போது, தங்கள் குழுவிற்கு, இனத்துக்கு அல்லது கிராமத்துக்கு என்று சில பழக்கவழக்கங்களை சுயமாக உருவாக்கி அவைகளை பின்பற்றிகொண்டு வந்தார்கள். அந்த காலக்கட்டத்தில் படிப்பறிவு இல்லாமல், இன்னும் நாகரீகமடையாத சமுதாயமாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மத பழக்கங்கள் அனைத்தும் சரியானவை என்று சொல்லமுடியாது. சில மத பழக்கங்கள் சிறந்ததாக இருக்கும், சில மத பழக்கங்கள் படு கேவலமானதாக மனிதாபமற்றதாக இருக்கும். இன்னும் சில மத பழக்கங்கள் முட்டாள்தனமானதாகவும் இருக்கும். இதனை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.
தம்பி: சரி, நீங்கள் அனுப்பிய தொடுப்பை ஓபன் செய்துக்கொண்டேன்….
தொடுப்பு: all-that-is-interesting.com/7-bizarre-cultural-practices (7 Bizarre Cultural Practices Still Carried Out Today)
உமர்: இந்த தொடுப்பை ஒரு உதாரணத்துக்குத் தான் கொடுத்தேன், இன்னும் இப்படிப்பட்ட அனேக கலாச்சரங்கள் உலகில் உண்டு.
1) விரல்களை வெட்டும் கலாச்சாரம்
குடும்பத்தில் ஒரு நபர் மரித்துவிட்டால், அவ்வீட்டு பெண்களின் விரல்களில் ஒரு பாகத்தை துண்டித்துவிடுவார்கள். இது "தானி" இனத்தவர்களின் (இந்தோனேசியா) கலாச்சாரமாகும். இப்படி துண்டிக்கப்பட்ட பெண்களின் விரல்களை மேலே கொடுக்கப்பட்ட தொடுப்பில் காணலாம்.
2) மரித்தவர்களின் சடலங்களை சாப்பிடும் கலாச்சாரம் (Endocannibalism):
இந்த அமேஜான் காட்டின் கிராமவாசிகள், தங்கள் இனத்தவர் மரித்துவிட்டால் அவரது சடலத்தை சாப்பிடுவது அவர்களின் கலாச்சாரம் ஆகும். இதோடு மட்டுமல்லாமல், மரித்தவர்களின் எலும்புகளை பொடி செய்து சூப் செய்து குடிப்பார்கள். இப்படி செய்தால், மரித்தவர்கள் சொர்க்கம் அடைவார்கள் என்பது இவர்களின் மத நம்பிக்கை.
3) புதைத்தவர்களை தோண்டி எடுத்து, ஊர்வலமாக நடக்க வைக்கும் கலாச்சாரம்
"தொராஜா" என்ற இந்தோனேசிய இனத்தவர்கள், தாங்கள் புதைத்த சடலங்களை மறுபடியும் தோண்டி எடுத்து, புது ஆடைகள் அணிவித்து, கிராமம் முழுவதும் நடக்கவைத்து ஊர்வலமாக வருகிறார்கள்.
4) எஸ்கிமோக்கள் – வயதானவர்களை பனிக்கட்டியில் மிதக்கவிட்டு அனுப்புவது.
இந்த எஸ்கிமோக்கள், வயதானவர்களை பனிக்கட்டியில் வைத்து, அப்படியே அனுப்பிவிடுவார்கள். அந்த பனிக்கட்டியில் உட்கார்ந்துக்கொண்டு, அவர் தன் குடும்பத்தாரிடமிருந்து விடைப்பெறுவார். பனிக்கட்டி கரையும், அல்லது எப்படியோ அது மூழ்கும் போது, அந்த நபர் அப்படியே மரித்துவிடுவார்.
தம்பி: இவைகளை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்?
உமர்: இவைகள் பல தரப்பட்ட மக்களின் மத நம்பிக்கைகள், கலாச்சாரங்கள். குடும்பத்தில் மரித்த ஒரு நபருக்காக பெண்களின் விரல்களை வெட்டும் கலாச்சாரம் பற்றி உன் கருத்து என்ன?
தம்பி: அது மிகவும் கொடூரமானது, படத்தை பார்க்கவே பரிதாபமாக உள்ளது.
உமர்: அப்படியானால், அது நல்ல கலாச்சாரமா அல்லது தீமை செய்யும் கலாச்சாரமா? நாம் வாழும் இந்த காலத்தில், இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இந்தியாவில் இருந்தால், அதனை நீதிமன்றம் அனுமதிக்கவேண்டுமா?
தம்பி: இல்லை, அனுமதிக்கக்கூடாது.
உமர்: மரித்தவர்களின் சடலங்களை சாப்பிடுவது, உயிரோடு இருக்கும் போதே பனிக்கட்டியில் வைத்து முதியவர்கள் சாகவேண்டும் என்றுச் சொல்லி அனுப்பிவிடுவது போன்ற கலாச்சாரத்தை நீ அனுமதிப்பாயா? நம் வீட்டில், நம் தாத்தா முதியவர் என்பதால், அவர் பனியில் செத்துமடியட்டும் என்றுச் சொல்லி அவரை பனிக்கட்டியில் உட்கார வைத்து அனுப்பிவிடலாமா? இந்த எஸ்கிமோக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுத்தால், அவர்களின் இந்த கலாச்சாராத்தை அனுமதிக்கலாமா?
தம்பி: அனுமதிக்கமுடியாது, இவைகள் சமுதாயத்திற்கு நல்லதல்ல.
உமர்: சரி, இப்போது சில இந்திய கலாச்சாரங்களை பார்.
1) உடன்கட்டை ஏறுதல்:
இந்த ஹிந்து கலாச்சாரத்தைப் பற்றி நீ அறிந்திருக்கின்றாய். உடன்கட்டை ஏறல் என்பது ஒரு இந்து சமயச் சடங்கு ஆகும். கணவனை இழந்த மனைவி தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் உடன்கட்டை ஏறுதல் எனப்படுகிறது. சில சமயங்களில் மனைவி தானாக முன்வந்து தீயில் விழ்ந்து அழிந்து கொள்ளலாம். பிற நேரங்களில் மற்றவர் அவரை வற்புறுத்தி உடன்கட்டை ஏற வைப்பர். (விக்கீபீடியா)
நீ என்ன நினைக்கிறாய் தம்பி? இந்த உடன்கட்டை ஏறுதல் கலாச்சார பழக்கத்தை இந்தியாவில் தொடரவிட்டிருக்கலாமா?
தம்பி: இல்லை… இல்லை… இது மிகவும் கொடூரமானது. பெண்களுக்கு எதிரான கலாச்சாரம் இது. இதனை அனுமதிக்கக்கூடாது.
உமர்: ஏன் அனுமதிக்கக்கூடாது? சில பெண்கள் தங்கள் கணவரை எரிக்கும் போது, விரும்பிச் சென்று உடன்கட்டை ஏறுகிறார்கள், இவர்களை அனுமதிக்கலாம் அல்லவா?
தம்பி: முட்டாள்தனமாக சிந்திக்கும் பெண்கள் தான் தங்கள் கணவரோடு எரிக்கப்பட விரும்புவார்கள்.
உமர்: ஆனால், பல நூற்றாண்டுகளாக முன்னோர்கள் பின்பற்றிய கலாச்சாரம் இல்லையா இது? இது எப்படி தவறு என்றுச் சொல்லமுடியும்?
தம்பி: பல நூற்றாண்டுகளாக உடன்கட்டை ஏறுதலை மக்கள் பின்பற்றிக்கொண்டு இருக்கலாம், முன்னோர்கள் அதனை ஆதரித்து இருக்கலாம், சில பெண்களும் அதனை ஆதரிக்கலாம். ஆனால், அதற்காக இப்படிப்பட்ட தீய கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது.
உமர்: வெரிக்குட், சில தீய கலாச்சாரங்களும் உலகில் உண்டு, அவைகளை நாம் விட்டுவிடவேண்டும் என்று இப்போது நீ ஒப்புக்கொண்டாய். இன்னொரு எடுத்துக்காட்டைச் சொல்லட்டும். உனக்கு தேவதாசி முறைப் பற்றி தெரியும் அல்லவா?
2) தேவதாசி முறை
ta.wikipedia.org/s/nbv (தேவதாசி முறை)
தம்பி: எனக்கு புரிந்துபோச்சு, நீங்க இதைப் பற்றி வேறு ஒன்றும் சொல்லவேண்டாம். தேவதாசி முறை என்பது கூட, ஒரு பழமை வாய்ந்த கலாச்சாரம் தான், அது இந்தியாவில் ஒழிக்கப்பட்டது காலத்தின் கட்டாயம், அது ஒழிக்கப்பட்டது நாட்டுக்கு நல்லதாகும்.
உமர்: கடைசியாக, ஒரே ஒரு மத நம்பிக்கையை கலாச்சாரத்தைப் பற்றி சொல்லிவிட்டு, இஸ்லாமுக்குச் செல்வோம்.
உனக்கு தீண்டாமைப் பற்றிச் சொல்லவேண்டும்.
தம்பி: இதையும் நீங்க விட்டுவைக்கவில்லையா?
உமர்: எப்படி விடமுடியும்? மதநம்பிக்கைகள், கலாச்சாரங்கள் என்றுச் சொல்லி சொல்லியே நாட்டின் அமைதியை கெடுப்பவர்கள் இருக்கும் போது, இவைகள் பற்றி சிறிது அலசுவது தானே நல்லது.
தம்பி: நான் ஒப்புக்கொள்கிறேன். தீண்டாமை என்பது கூட ஒரு சமுதாய சீர்கேடு ஆகும். இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இவைகளை பின்பற்றிக்கொண்டு இருந்தாலும், 20ம் நூற்றாண்டு ஆரம்ப காலத்தில் மஹாத்மா காந்தி மற்றும் டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் அயராத உழைப்பினால் தீண்டாமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது போற்றப்படத்தக்க விஷயமாகும்.
அண்ணா! நான் ஒப்புக்கொள்கிறேன், கலாச்சாரம் என்பது பல ஆண்டுகளாக பின்பற்றிக்கொண்டு இருந்தாலும், சில தீய கலாச்சாரங்களை விட்டுவிடவேண்டியது அவசியம்.
உமர்: சபாஷ், உன்னைப் போல, "சொல்லவந்த விவரத்தை" நச்சென்று முஸ்லிம்கள் சீக்கிரமாக புரிந்துக்கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
தம்பி: சரி, இஸ்லாமிலிருந்து ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன் என்றுச் சொன்னீர்களே, அது என்ன?
உமர்: அரேபியாவில் இஸ்லாம் உருவாவதற்கு முன்பு, அங்கு நிலவிய தீய கலாச்சார பழக்கவழக்கங்களில் முக்கியமான ஒன்று, பெண் குழந்தைகளை உயிருடன் கொன்றுவிடுவது பற்றியாகும். இதைப் பற்றி உனக்கு நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன். சிறிது விளக்கமுடியுமா?
தம்பி: ஆம் நிச்சயமாக விளக்குவேன். அக்கால அரேபியாவில் ஏழ்மைக்கு பயந்து பெண் பிள்ளைகளை உயிருடன் புதைக்கும் பழக்கம் இருந்தது. இந்த தீய பழக்கத்தை, குர்-ஆன் பல வசனங்களில் கண்டித்து உணர்த்தியது. இந்த தீய அரேபிய கலாச்சாரத்தை ஒழித்து இஸ்லாம் ஒரு புரட்சியை செய்துக்காட்டியது.
இதைப் பற்றி குர்-ஆன் 81:8-9, 17:31 மற்றும் 6:151 வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது.
குர்-ஆன் 81:8-9
81:8. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
81:9. "எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-
குர்-ஆன் 17:31
17:31. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
குர்-ஆன் 6:151
6:151. ". . . வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; . . .
உமர்: சூப்பர், சரியாகச் சொன்னாய். உனக்கு சில கேள்விகள். பெண் பிள்ளைகளை கொல்லும் பழக்கம், அம்மக்களின் கலாச்சாரம் அல்லவா? இதில் ஏன் முஹம்மது அல்லது குர்-ஆன் தலையிட்டது? அரேபியர்களின் மூதாதையர்கள் பின்பற்றிய பழமைவாய்ந்த கலாச்சாரத்தில் ஏன் முஹம்மது தலையிட்டார்? இது தவறு இல்லையா?
தம்பி: இது அவர்களின் கலாச்சாரமே! அவர்களின் மூதாதையர்கள் பின்பற்றியதே! ஆனால், அது தவறு இல்லையா! பெண் பிள்ளைகளை உயிருடன் கொல்வது பாவமில்லையா? ஆகையால், தான் குர்-ஆன் தலையிட்டு சீர்திருத்தம் செய்தது.
உமர்: என்ன தான் இருந்தாலும், மற்றவர்களின் கலாச்சாரங்களில் மூக்கை நுழைக்க முஹம்மதுவிற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?
தம்பி: யார் அதிகாரம் கொடுக்கவேண்டும்? ஒரு மதப்பழக்கம் தீயதாக இருந்தால், சமுதாயத்தின் நலன் கருதி, நாம் தலையிட்டு நன்மை செய்வதில் என்ன தவறு இருக்கிறது? அநியாயமாக பெண் பிள்ளைகளுக்கு தீமை நடப்பதை எப்படி பார்த்துக்கொண்டு இருக்கமுடியும்?
உமர்: சரியாகச் சொன்னாய், உன்னை நான் மெச்சிக்கொள்கிறேன், நீ அறிவாளி தான். இதே நிலைப்பாட்டில் இரு, நம்முடைய உரையாடல் இன்னும் பயனுள்ளதாக மாறும்.
தம்பி: அதை விடுங்க. நான் கேட்ட கேள்வி, முஸ்லிம்களின் கலாச்சார விஷயங்களில் (தலாக்), தலையிட இந்திய நீதிமன்றத்திற்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்பதாகும். அதைப் பற்றி சொல்வதை விட்டு விட்டு, ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கீங்களே!
உமர்: இப்போது தான் நீ அறிவாளி என்றுச் சொன்னேன், அதற்குள் என்னை பொய்யனாக்கிவிட்டாயே? நான் இன்னும் தலாக் பற்றி உன்னிடம் பேசவில்லை. அதற்கு முன்பாக, 'நல்ல கலாச்சாரம், தீய கலாச்சாரம்' பற்றிய ஒரு தெளிவை உண்டாக்கிவிட்டு, அதன் பிறகு தலாக் பற்றி பேசலாம் என்று நினைத்துத் தான் இதுவரை பேசிக்கொண்டு இருக்கிறேன்.
இதுவரை நாம் பேசிய விவரங்களிலிருந்து, மத நம்பிக்கைகளில், பழக்கவழக்கங்களில், கலாச்சாரங்களில் நல்லவைகளும் உண்டு, தீயவைகளும் உண்டு என்பதை நீ ஒப்புக்கொள்கிறாயா?
தம்பி: ஆம், ஒப்புக்கொள்கிறேன்.
உமர்: ஒருவேளை சில கலாச்சாரங்களினால் சமுதாயத்துக்கு தீமை விளையுமானால், அதனை விட்டுவிட மக்கள் (அந்த மதம் சார்ந்த மக்கள்) தயாராக இருக்கவேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறாயா?
உதாரணத்திற்கு, உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை, தீண்டாமை போன்றவற்றை விட்டுவிட இந்துக்கள் ஒப்புக்கொண்டார்களே அது போல (சிலர் இவைகளை எதிர்ப்பார்கள், இன்றும் எதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம், ஆனால், பெரும்பான்மை இந்துக்கள் மேற்கண்ட தீய கலாச்சாரங்களை விட்டுவிட்டார்கள் என்பது மெச்சிக்கொள்ளவேண்டிய விஷயமாகும்).
தம்பி: ஆம், ஒப்புக்கொள்கிறேன், சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் கலாச்சார பழக்கங்கள், ஒருவேளை அவைகளை பல நூறு ஆண்டுகளாக பின்பற்றிக்கொண்டு இருந்தாலும் சரி, அதனை விட்டுவிட மக்கள் தயாராக இருக்கவேண்டும்.
உமர்: இந்த நிலையிலேயே நீ இரு, நாம் தலாக் பற்றி பேசுவோம்.
தம்பி: மேற்கண்ட தீய கலாச்சாரங்களுக்கும், தலாக்கிற்கும் என்ன சம்மந்தம். தலாக்கில் யாருக்கும் எந்த ஒரு தீமையும் இல்லை, அது அல்லாஹ் கொடுத்த கட்டளையாகும், அதனை யாரும் மாற்ற முடியாது.
உமர்: அடப்பாவமே! மற்றவர்களின் கலாச்சாரங்கள் பற்றி பேசும் போது, இதுவரை பெரிய சீர்திருத்தவாதி போல பேசிவிட்டு, இஸ்லாமின் கலாச்சாரம் பற்றி வரும் போது மட்டும், வேதாளம் மறுபடியும் மரம் ஏறிவிட்டது என்றுச் சொல்வது போல தப்புத்தாளம் போடுகிறாயே!
தம்பி: நீங்கள், இஸ்லாமை அவமானப்படுத்துகிறீர்கள், 1400 ஆண்டுகளாக பின்பற்றிக்கொண்டு வந்த கலாச்சாரம் எப்படி தவறானதாக இருக்கும்? இதை நான் சகிக்கமாட்டேன். . . . . தம்பி ஆவேசமாக பேசிக்கொண்டே இருந்தான்…. சில வார்த்தைகளுக்கு பிறகு போனை கட் செய்துவிட்டான். . .
தலாக் 1 – முடிவுரை:
நம்மில் அனேகர் பல தவறான கலாச்சாரங்களை சரியான கலாச்சாரங்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், அவைகளின் உண்மைநிலையை அறியும் போது அதனை ஒப்புக்கொள்ளும் தைரியம் நம்மிடம் பல நேரங்களில் இருப்பதில்லை.
அ) கலாச்சாரங்களிலும் சில தவறான மற்றும் தீமை செய்யும் கலாச்சாரங்கள் உலகில் உண்டு.
ஆ) அவைகள் மதங்களின் பெயரில் செய்யப்படுகின்றபடியினால், அவைகளுக்கு எதிராக யாரும் குரல் கொடுப்பதில்லை.
இ) கடந்த கால பக்கங்களை புரட்டிப்பார்த்தால், இவைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் குரல்வளை நெருக்கப்பட்டுள்ளதை காணமுடியும். இதனால் பலர் தங்கள் குரலை எழுப்ப தைரியம் கொள்ளவில்லை.
ஈ) காலத்தின் கட்டாயத்தை உணராமல், தங்களை சீர்திருத்திக்கொள்ளாமல் இருக்கும் மதங்கள், அவைகளை பின்பற்றும் மக்கள் பல அவமானங்களையும் எதிர்ப்புக்களையும் தற்காலத்தில் சந்தித்து வருகிறார்கள், இன்னும் சந்திப்பார்கள். . . .
என் அறைக்கதவை யாரோ மூன்று முறை தட்டும் சத்தம் கேட்டது, டக், டக், டக் என்று தட்டிய சத்தம் என் காதில் தலாக்… தலாக்… தலாக்… என்று ஒலித்தது. இது என்ன பிரமையா? நான் கதவை திறக்கச் செல்கிறேன்…
உங்களை அடுத்த தொடரி்ல் சந்திக்கிறேன். . .
உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்
Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/talaq/talaq1.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக