முந்தைய கட்டுரையில், மத கலாச்சாரங்களில் நல்ல மற்றும் தீய கலாச்சாரங்கள் உள்ளன என்பதைக் கண்டோம் (தலாக் பாகம் 1ஐ படிக்க இங்கு சொடுக்கவும்). இந்த கட்டுரையில், ஒரு முஸ்லிம் தன் மனைவியை எந்தெந்த காரணங்களுக்காக தலாக் (விவாகரத்து) செய்யலாம் என்று குர்-ஆன் கட்டளையிடுகின்றது என்பதைக் காண்போம்.
1) ஒன்றுபட்ட மனங்கள் வெறுபட்டால் . . .
திருமணத்தின் போது இரு மனங்கள் ஒன்றுபடுகின்றன. ஒருவரை ஒருவர் நேசித்து குடும்பம் நடத்தப்படுகின்றது. கணவன் மனைவி என்ற உறவு, மற்ற உறவுகளைவிட சிறப்பான ஒன்றாகும், இதனை திருமணமான அனைவரும் அறிவார்கள். ஆனால், சில நேரங்களில் சில காரணங்களுக்காக கணவன் மனைவி பிரிந்துவிட முடிவு செய்கிறார்கள். பெரியோர்களால் சமரசம் செய்யப்பட்டும் பயன் கிடைக்கவில்லையென்றால், சட்டப்படி கணவனும் மனைவியும் பிரிவது தான் ஒரே வழி. விவாகரத்துக்கு பிறகு எந்த ஒரு சிக்கலும் வரக்கூடாது என்பதற்காக சட்டத்தின் அடிப்படையில் பிரிவது தான் நல்லது.
2) குர்-ஆனும் தலாக்கும்
சில மாதங்களாக இந்திய செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் தலாக் அல்லது முத்தலாக் (Triple Talaq) போன்ற வார்த்தைகள் அதிகமாக அடிபடுவதை காணமுடியும். இதைப் பற்றி ஒவ்வொரு நாளும் அனேக விவாதங்கள் நடந்துக்கொண்டு இருக்கின்றன. இஸ்லாமிய விவாகரத்து முறையில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றது. சில முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவிகளுக்கு SMS (குறுஞ்செய்தி) மூலமாக விவாகரத்து கொடுப்பதாகவும், அதனால் முஸ்லிம் பெண்கள் அவதிப்படுவதாகவும் செய்திகளில் வாசிக்கிறோம். இவைகள் ஒரு புறம் இருக்கட்டும். இந்த கட்டுரையில், தலாக் பற்றி குர்-ஆன் என்ன சொல்கின்றது என்பதை மட்டும் காண்போம். இஸ்லாமின் புனித வேதம் குர்-ஆன் ஆகும். இது தான் இஸ்லாமிய சட்டங்களுக்கு பிரதான அடிப்படை. எனவே, நிச்சயமாக, முஸ்லிம்கள் தலாக் கொடுக்கும் போது, முதலாவது குர்-ஆனின் அடிப்படையில் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.
கீழ்கண்ட வசனங்கள் அனைத்தும், தலாக் (விவாகரத்து) பற்றி குர்-ஆனில் காணப்படும் வசனங்களாகும், பட்டியல் பெரியதாக இருக்கிறது, இருந்தாலும் நமக்கு வேறு வழியில்லை, இவ்வசனங்களை நாம் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். ஓரிரு வசனங்கள் விடுபட்டு இருந்தால், வாசகர்கள் எனக்கு தெரிவிக்கலாம். (இவைகள் முஹம்மது ஜான் குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன). இவைகளை படித்த பிறகு தான் நாம் ஒரு முக்கியமான விவரத்தை ஆய்வு செய்யப்போகிறோம். அந்த ஆய்வு, 'தற்கால தலாக் பற்றிய சர்ச்சையை' சரியாக புரிந்துக்கொள்ள நமக்கு உதவும்.
2:226. தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
2:227. ஆனால், அவர்கள் (தலாக்) விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
2:228. தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு, கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு; மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.
2:229. (இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள் முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;; அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர, நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை; இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்; ஆகையால் அவற்றை மீறாதீர்கள்; எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.
2:230. மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.
2:231. (மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை-இத்தா-முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள்; அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள்; ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்; அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்; இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்; எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்; அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்துப் பாருங்கள். இவற்றைக் கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான்; அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:232. இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள்; உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது; இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.(குர்-ஆன் 2:226-232)
2:236. பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் - அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும்.
2:237. ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கிறதோ அவர்களோ முழுமையும்) மன்னித்து விட்டாலன்றி; - ஆனால், (இவ்விஷயத்தில்) விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.(குர்-ஆன் 2:236-237)
2:240. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசுகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான்.
2:241. மேலும், தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமான முறையில் சம்ரட்சணை பெறுவதற்குப் பாத்தியமுண்டு (இது) முத்தகீன்(பயபக்தியுடையவர்)கள் மீது கடமையாகும். (குர்-ஆன் 2:240-241)
33:28. நபியே! உம்முடைய மனைவிகளிடம்: "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.
33:49. ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே "தலாக்" செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். (குர்-ஆன் 33:49)
65:1. நபியே! நீங்கள் பெண்களைத் "தலாக்" சொல்வீர்களானால் அவர்களின் "இத்தா"வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது; இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்; (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.
65:2. ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள்; அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்; மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது - தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். (குர்-ஆன் 65:1-2)
4:20. நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?
4:21. அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (குர்-ஆன் 4:20-21)
4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
4:35. (கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான். (குர்-ஆன் 4:34-35)
3) குர்-ஆனில் தலாக்கிற்கான காரணங்கள் தென்படுகின்றனவா?
மேற்கண்ட வசனங்களை கூர்ந்து படியுங்கள்.
அவைகளில்,
அ) ஒரு பெண்ணை விவாகரத்து செய்ய ஒரு ஆண் முடிவு செய்துவிட்டால் என்ன செய்யவேண்டும்?
ஆ) அப்பெண்ணின் இத்தா காலம் (அடுத்த திருமணத்திற்கு முன்பு காத்திருக்கும் காலம்) எப்படி கணக்கிடவேண்டும்?
இ) தலாக் கொடுக்கும் போது, மஹர் பணத்தை எப்படி பெண்கள் கையாளவேண்டும்?
போன்ற விவரங்கள் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆனால், "ஒரு ஆண் எந்தெந்த காரணங்களுக்காக தன் மனைவியை விவாகரத்து செய்யலாம்" என்ற விவரம் மட்டும் சொல்லவே இல்லை. மேற்கண்ட வசனங்களில் வரும் கீழ்கண்ட வாக்கியங்களை கவனித்துப் பாருங்கள். இவைகளில், "ஒரு ஆண் விவாகரத்து செய்தால் அல்லது செய்ய விரும்பினால் . . ." என்று தொடங்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த ஆண் எந்தெந்த காரணங்களுக்காக 'விவாகரத்து முடிவை' எடுக்கலாம் என்ற விவரம் காணப்படாது.
2:226. தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; . . .
2:227. ஆனால், அவர்கள் (தலாக்) விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால். . .
2:232. இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், . . .
2:236. பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால். . .
2:237. ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின். . .
33:49. ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே "தலாக்" செய்து விட்டீர்களானால், . . .
65:1. நபியே! நீங்கள் பெண்களைத் "தலாக்" சொல்வீர்களானால் அவர்களின் "இத்தா"வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். . . .
4:20. நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால் . . .
4) மனைவி மாறு செய்வாள் என்று கணவன் 'அஞ்சுவது' காரணமாகுமா?
குர்-ஆன் 4:34 வசனத்தை கவனித்துப்பாருங்கள் – ஒரு பெண் தன் கணவனுக்கு மாறு செய்வாள் என்று கணவன் "அஞ்சினால்" அவளை எப்படி நடத்தவேண்டும் என்று இவ்வசனம் ஆண்களுக்கு அறிவுரை கூறுகிறது. கூர்ந்து கவனியுங்கள், அந்தப்பெண் 'அந்த மாறு செய்துவிட்டால், என்று இவ்வசனம் சொல்லவில்லை', அதற்கு பதிலாக அந்த கணவன் தன் மனைவி மாறு செய்வாள் என்று 'சந்தேகப்பட்டால், அஞ்சினால்' கணவன் மனைவியை இஸ்லாமிய பாணியில் எப்படி வழிக்கு கொண்டுவரலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆண்கள் பெண்களைப் பற்றி அஞ்சினாலே போதும், அல்லாஹ் சொல்லும் கட்டளைகளின் படி பெண்களை நடத்தலாம். உண்மையாகவே அந்தப்பெண் மாறு செய்யவேண்டிய அவசியமில்லை.
4:34. . . . . எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள்
ஒரு கணவன் மனைவியை அடிக்கலாமா? என்பது வேறு தலைப்பு. இந்த கட்டுரையின் கருப்பெருளைப் பொருத்தமட்டில், "குறிப்பிட்ட சில பலமான காரணங்களை முன்வைத்து, அல்லாஹ் ஆண்களுக்கு தலாக் கொடுக்க அறிவுரை கூறியுள்ளானா என்று குர்-ஆனில் தேடினால் நமக்கு பதில் கிடைக்காது" என்பதாகும்.
மேற்கண்ட குர்-ஆன் வசனங்களை கவனித்தால், "ஆண்களாகிய நீங்கள் தலாக் கொடுக்க விரும்பினால் இப்படி செய்யுங்கள், அப்படி செய்யுங்கள்" என்று அல்லாஹ் பொதுப்படையாக காரணங்களைச் சுட்டிக்காட்டாமல் பேசியிருப்பதை காணமுடியும். ஆனால் தலாக்கிற்காக ஒரு பலமான காரணம் நிச்சயம் இருக்கவேண்டும் என்ற கட்டளைகளை குர்-ஆனில் காணமுடியாது. ஆனால், பிஜே போன்ற முஸ்லிம் அறிஞர்களிடம் இதைப் பற்றி கேட்கும் போது, சுயமாக பல காரணங்களை தற்காலத்துக்கு ஏற்றபடி சொல்வார்கள், ஆனால், அவைகள் பற்றி குர்-ஆனிடம் கேட்டால், அது முகத்தை திருப்பிக்கொள்கிறது என்பது தான் உண்மை.
குர்-ஆன் 4:35ம் வசனத்தில் இருவரின் உறவினர்களில் சிலரை மத்தியஸ்தர்களாக வைத்து முதலாவது சமரசம் செய்யுங்கள் என்றுச் சொல்லப்பட்டுள்ளது, இது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால், இந்த உறவினர்கள் எதனை அடிப்படையாக வைத்து சமரசம் செய்வார்கள்? ஒவ்வொரு நாட்டில் ஒரு பழக்கம் இருக்கும். ஒரு நாட்டில் நல்ல செயல் என்று கருதப்படுவது, இன்னொரு நாட்டில் தீயச் செயல் என்று கருதப்படும். தலாக் செய்வதற்கான குறைந்த பட்ச பலமான காரணங்களை குர்-ஆன் சொல்லியிருக்கவேண்டும், அதைவிட்டுவிட்டு, உறவினர்களின் அறிவுரைகளின் மீது மட்டுமே சார்ந்து இருப்பது ஏற்புடையதல்ல.
முஸ்லிம்களுக்கு ஒரு தர்மசங்கடமான கேள்வி:
ஒரு முஸ்லிம் தன் மனைவியை விவாகரத்து செய்ய "இதோ இந்த 5 (அ) 10 காரணங்கள் இருக்கவேண்டும் என்று குர்-ஆன் தெளிவாக நிர்ணயித்துள்ளது என்று" முஸ்லிம்கள் குர்-ஆனிலிருந்து வசனங்களை எடுத்துக்காட்டமுடியுமா?
5) அற்பமானவைகளை தெளிவாக விளக்கும் குர்-ஆன், முக்கியமானவைகளை மறந்தது ஏன்?
அல்லாஹ் பல விவரங்களை விளக்கும்படி, ஜிப்ரீல் தூதன் மூலம் முஹம்மதுவிற்கு வெளிப்பாடுகளை இறக்கினான். அவைகளில் முக்கியமானவைகளும் அற்பமானவைகளும் அடங்கும். கீழ்கண்ட சில எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்.
• முஸ்லிம்கள் யாரை திருமணம் செய்யலாம்? (குர்-ஆன் 4:22-24)
• முஸ்லிம்கள் யாரை திருமணம் செய்யக்கூடாது? (குர்-ஆன் 4:22-24)
• முஸ்லிம் ஆண்கள் எத்தனை திருமணம் செய்யலாம்? (குர்-ஆன் 4:3)
• முஸ்லிம் ஆண்கள் அடிமைப் பெண்களோடு திருமணம் செய்துக்கொள்ளாமல் அவர்களோடு விபச்சாரம் செய்யலாமா? (குர்-ஆன் 23:6, 70:30)
• முஹம்மது யாரை திருமணம் செய்யலாம்? யாரை செய்யக்கூடாது? (குர்-ஆன் 33:50-52)
• முஹம்மதுவின் வளர்ப்பு மகனின் மனைவியை முஹம்மது எப்போது, எப்படி திருமணம் செய்யலாம்? (குர்-ஆன் 33:37)
• இஸ்லாமின் எதிரியை எப்படி சபிக்கலாம், அவர் மனைவிக்கான சாபம் என்ன? (குர்-ஆன் அத்தியாயம் 111)
• சொர்க்கத்தில் என்ன கிடைக்கும்? (குர்-ஆன் 5:119, 13:23-24, 9:72, 2:25, 38:50-52)
• நரகத்தில் என்ன தண்டனை கிடைக்கும்? (குர்-ஆன் 2:24, 4:45-46, 22:19-22, 14:16, 37:62-68)
• மனைவியை எப்படி அடிக்கலாம்? எப்போது தன் படுக்கையிலிருந்து தள்ளிவைக்கலாம்? (4:34)
• மலஜலம் கழிக்கும் போது, உடலுறவின் போது, பிறப்புறுப்பு வானத்துக்கு தெரிந்துவிடுகின்றது என்று கவலைப்படும் முஸ்லிம்களுக்காக வசனம் (குர்-ஆன் 11:5 & மேலதிக விவரங்களுக்காக ஸஹீஹ் புகாரி 4681 & 4682)
மேற்கண்டவைகளைப் பற்றி பேசும் குர-ஆன் ஏன் ஒரு குடும்பம் பிரிவதைப் பற்றி அக்கரையில்லாமல் இருக்கிறது? பெண்களை விவாகரத்து செய்வதற்கு பல பலமான காரணங்கள் (தவறுகள்) தேவை, அப்படிப்பட்ட தவறுகள் செய்யும் பெண்களை மட்டுமே நீங்கள் தலாக் செய்யலாம் என்று குர்-ஆன் காரணங்களை பட்டியல் இடலாம் அல்லவா? முஸ்லிம்கள் மலஜலம் கழிக்கும் போது, அல்லது உடலுறவின் போது, தங்கள் பிறப்புறுப்பு வானத்துக்கு தெரிந்துவிடுகின்றது என்று அஞ்சி, அவைகளை மூட முயலுபவர்களுக்காக ஒரு வசனத்தை (11:5) அல்லாஹ் இறக்கக்கூடுமானால், ஏன் விவாகரத்து என்ற தீய செயலுக்கும் சில வசனங்களை தெளிவாக இறக்கியிருக்கக்கூடாது? அப்படி இறக்கியிந்தால், காலாகாலமாக முஸ்லிம் பெண்கள் அவதிப்பட்டு இருந்திருக்கமாட்டார்களே! இக்கேள்விகளை முஸ்லிம் பெண்கள் தான் கேட்கவேண்டும் (யாரிடம் கேட்பது? என்பது வேறு விஷயம்).
கடைசியாக, முஹம்மதுவின் வளர்ப்பு மகனின் மனைவியை எடுத்து மாமனாரின் (முஹம்மதுவின்) மடியிலே கொடுப்பது பற்றி அதாவது திருமணம் செய்வது பற்றி கூட அல்லாஹ் காபிரியேல் தூதனை அனுப்பி வெளிப்பாடுகளை (33:37) இறக்கினான். இது ஒரு முறை மட்டுமே நடந்த விஷயம். ஆனால், ஏழாம் நூற்றாண்டிலிருந்து உலக முடிவுவரை முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவிகளை தலாக் கொடுக்கும் போது, குறைந்தபட்சம் பார்க்கவேண்டிய பலமான காரணங்களைப் பற்றி பேச அல்லாஹ்விற்கு வசனங்கள் குறைவுபட்டுவிட்டதா? தலாக் பற்றின் இன்னும் சில வசனங்களை தெளிவாக இறக்கியிருக்கலாம் அல்லவா?
6) ஹதிஸ்களும், இஸ்லாமிய அறிஞர்களும் இமாம்களும்:
இப்போது முஸ்லிம்கள், 'தலாக் செய்வதற்கான நியாயமான மற்றும் பலமான காரணங்களை எங்கள் இமாம்கள், ஹதீஸ்களை படித்து ஆய்வு செய்துச் சொல்வார்கள்' என்று சொல்லக்கூடும். ஆனால், இந்த கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்வி 'ஏன் குர்-ஆன் அவைகளைச் சொல்லவில்லை என்பது தான்'. தலாக் பற்றிய பலமான காரணங்கள் ஹதீஸ்களில் உள்ளதா? இல்லையா? என்பதைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் பார்க்கலாம். ஹதீஸ்கள் குர்-ஆனுக்கு ஈடாகுமா? இன்று ஒரு ஹதீஸை தள்ளுபடி செய்வார்கள், நாளை இன்னொரு ஹதீஸ் பலவீனம் என்பார்கள். எங்கே, உலகமனைத்திலும் உள்ள சுன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ள ஒரு இமாமின், முஸ்லிம் அறிஞரின் பெயரைச் சொல்லுங்கள் பார்க்கலாம்? ஒரு முஸ்லிம் அறிஞரை இன்னொருவர் காஃபிர் என்றுச் சொல்வதே, தற்கால இஸ்லாமியர்களின் வழக்கமாகிவிட்டதே (இதற்கு சரியான எடுத்துக்காட்டு நம் தமிழ்நாட்டு அறிஞர்களாவார்கள்). குர்-ஆன் இறைவேதம் என கருதினால், அதில் தலாக் பற்றி சொல்லப்பட்டால், அதற்கான காரணங்கள் சொல்லப்படவேண்டாமா? இது குறைந்த பட்ச எதிர்ப்பார்ப்பு இல்லையா?
தலாக் கொடுப்பதை அல்லாஹ் விரும்புவதில்லை, ஆனால் காலத்தின் கட்டாயம் என்பதால் அதனை அனுமதித்தான் என்று முஸ்லிம்கள் காரணம் சொல்வார்களானால், அதே அல்லாஹ், ஒரு ஆண் பெண்ணை தலாக் செய்யும் போது, அதற்கு பலமான காரணங்கள் இருக்கவேண்டும் என்று குர்-ஆனில் சொல்லியிருக்கவேண்டாமா?
தலாக் 2 – முடிவுரை:
இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட குர்-ஆன் வசனங்களை திறந்த மனதுடன் ஒருவர் படித்தால், அவருக்கு எழும் கேள்விகள்:
– ஏன் இவ்வசனங்கள் ஆண்கள் பக்கம் அதிகம் சார்ந்து சொல்லப்பட்டதாகத் தெரிகின்றது?
– ஒரு ஆண் எக்காரணங்களை முன்னிட்டு தலாக் கொடுக்கலாம் என்ற வரையறையை குர்-ஆன் ஏன் நிர்ணயிக்கவில்லை?
– தலாக் என்ற முக்கியமான விவரத்திற்கு ஏன் இவ்வளவு குறைந்த முக்கியத்துவத்தை குர்-ஆன் கொடுத்துள்ளது?
– தலாக்கின் பாதி விவரங்களை குர்-ஆன் சொல்லிவிட்டு, மீதமுள்ளதை பலவீனமான மனிதர்கள் (இமாம்கள் மற்றும் ஹதீஸ்கள்) கையில் கொடுத்துவிடுவது எப்படி அறிவுடையதாக கருதப்படும்?
– குர்-ஆன் இறைவேதமென்றால், பிரதானமான விவரங்கள் மற்றும் கட்டளைகள் அதில் அல்லவா இருக்கவேண்டும்! ஹதீஸ்களில் ஏன் முக்கியமான விவரங்கள் காணப்படுகின்றது?
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் குர்-ஆனும் அல்லாஹ்வும் முஹம்மதுவும் தலாக் விஷயத்தில் பெண்களுக்கு செய்த அநியாயத்தை யாராலும் மன்னிக்கமுடியாது.
தலாக்கும் இந்திய ஊடகத்துறையும்:
தலாக் பற்றிய முழு விவரமும் நமக்கு புரிய, இப்படிப்பட்ட ஆய்வுகள் நமக்குத் தேவையாக இருக்கின்றது. இந்திய ஊடகத்துறை சில இமாம்களை பிடித்துக்கொண்டு, முஸ்லிம் அறிஞர்களை பிடித்துக்கொண்டு விவாதம் புரிந்துக்கொண்டு இருக்கிறது. முக்கியமாக "அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியத்தின் (http://www.aimplboard.in/)" இமாம்களை, அறிஞர்களை பிடித்துக்கொண்டு விமர்சித்துக்கொண்டு இருக்கிறது. அவர்களிடம் கேள்வி கேட்பதற்கு முன்பாக, குர்-ஆனிடம் கேள்வி கேட்கவேண்டுமல்லவா? முஹம்மது சொன்ன விவரங்களை ஆய்வு செய்யாமல், தற்கால இமாம்களை பிடித்து உலுக்கினால் என்ன கிடைக்கும்? நல்ல கனிகளுள்ள மரத்தை பிடித்து உலுக்கினாலாவது சில கனிகள் உதிரும், இமாம்களை உலுக்கினால் என்ன கிடைக்கும்? சில ஆவேசமாக வார்த்தைகளும், பல குற்றச்சாட்டுகளும் தவிர. இந்திய ஊடகத்துறை நேரம் செலவழித்து இஸ்லாமின் மூல நூல்களை படித்து ஆய்வு செய்யாதவரை, அவர்களின் விவாத நிகழ்ச்சிகள் அனைத்தும், பாலைவனத்தில் பத்தாயிரம் மரக்கன்றுகளை நட்டுவிட்டு, வீடு திரும்பி, 'நானும் மரம் நட்டுவிட்டேன், இனி மழை பொழியும்' என்று அற்பமாக திருப்தியடையும் செயலுக்கு சமமானதாக இருக்கிறது.
அடுத்த 'தலாக்' தொடரில் சந்திப்போம்…
உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்
Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/talaq/talaq2.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக