தலாக் தொடரின் முந்தைய கட்டுரையில், ஒரு முஸ்லிம் ஆண் தலாக் கொடுப்பதற்கான சரியான காரணங்களை குர்-ஆன் கட்டளையிடவில்லை என்பதை எடுத்துக்காட்டினேன். இந்த கட்டுரையில், ஒரு குறிப்பிட்ட காரணத்தை முன்வைத்து, அல்லாஹ் முஹம்மதுவின் மனைவியர்களை பயமுறுத்திய வசனத்தைக் காண்போம். தலாக் கொடுப்பதற்கு இது ஒரு பலமான காரணமாக இருக்குமா என்பதை வாசகர்கள் முடிவு செய்யட்டும்.
1) "குடும்ப செலவிற்கு" அதிகம் கேட்டதால் "பிளாக்மெயில்" செய்யப்பட்ட அன்னையர்கள்
ஒரு முஸ்லிம் ஆண், தன் மனைவியை விவாகரத்து (தலாக்) செய்வதற்கான நியாயமான காரணங்களை அல்லாஹ் குர்-ஆனில் சொல்லியுள்ளானா? என்பதை தேடும் போது, குர்-ஆன் 33:28-29 வசனங்கள் கண்களில் பட்டது.
குர்-ஆன் 33:28-29:
33:28. நபியே! உம்முடைய மனைவிகளிடம்: "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.
33:29. "ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்" என்றும் கூறுவீராக! (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
இவ்விரு வசனங்களில் அல்லாஹ் முஹம்மதுவின் மனைவிமார்களை பிளாக்மெயில் செய்வதை (பயமுறுத்துவதை) காணமுடியும். அதாவது, உங்களுக்கு செல்வம் அதிகமாக தேவையா? சரி, கொடுத்துவிடுகிறோம், ஆனால், அந்த செல்வத்தோடு கூட, உங்களை முஹம்மது விவாகரத்தும் செய்துவிடுவார். "அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்" என்பதன் அர்த்தம், தலாக் கொடுத்துவிடுகிறேன் என்பதாகும். எனவே, நீங்கள் இப்போது ஒரு முடிவை எடுக்கவேண்டும்:
முடிவு 1: செல்வம் தரப்படும் அதோடு கூட தலாக்கும் இலவசமாக தரப்படும் (Buy 1 Get 1 free).
முடிவு 2: செல்வம் வேண்டாம், முஹம்மது தான் வேண்டும் என்றால் மகத்தான கூலி கொடுக்கப்படும்
2) இவ்வசனங்களின் பின்னணி – ஹதீஸ்களிலிருந்து
மேற்கண்ட வசனங்களின் பின்னணி என்னவென்பதை விளக்கும் ஸஹி ஹதீஸ்கள் உள்ளன.
முஸ்லிம் எண் 2946
2946. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களது வீட்டுக்கு) வந்து, உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்போது மக்கள் பலர், தங்களில் எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடைக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டு வாசலிலேயே அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அனுமதி கிடைத்ததும் அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் வந்து உள்ளே நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. (அவர்களும் உள்ளே நுழைந்தார்கள்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றி தம் துணைவியர் இருக்க, பேச முடியாத அளவிற்குத் துக்கம் மேலிட்டவர்களாக மௌனமாக அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் "நபி (ஸல்) அவர்களைச் சிரிக்க வைக்க எதையேனும் நான் சொல்லப்போகிறேன்" என்று (மனதிற்குள்) சொல்லிக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி (ஹபீபா) பின்த் காரிஜா என்னிடத்தில் குடும்பச் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கேட்க, நான் அவரை நோக்கி எழுந்து அவரது கழுத்தில் அடித்து விட்டேன் என்றால், நீங்கள் என்ன சொல்வீர்கள்?" என்று கேட்டார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். "இதோ நீங்கள் காண்கிறீர்களே இவர்களும் என்னிடம் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கோரியே என்னைச் சுற்றிக் குழுமியுள்ளனர்" என்று கூறினார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம்முடைய புதல்வி) ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி, அவர்களது கழுத்தில் அடிக்க எழுந்தார்கள். அடுத்து உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வி) ஹஃப்ஸாவை நோக்கி, அவர்களது கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாததை நீங்கள் கேட்கிறீர்களா?" என்று அவர்களிருவருமே கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாத எதையும் ஒருபோதும் நாங்கள் கேட்கமாட்டோம்" என்று கூறினர்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தொன்பது நாட்கள் தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். பிறகு "நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்" என்று தொடங்கி, "உங்களிலுள்ள நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை அல்லாஹ் தயார் செய்துள்ளான்" என்று முடியும் (33:28,29)இந்த வசனங்கள் அவர்களுக்கு அருளப்பெற்றன.
இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "ஆயிஷா! நான் உன்னிடம் ஒரு விஷயத்தை முன்வைக்க விரும்புகிறேன். அது தொடர்பாக நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து)விடக் கூடாது என விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (33:28ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (உறவைத் துண்டிக்கும்) விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்? இல்லை! நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே தேர்ந்தெடுக்கிறேன்"என்று சொல்லிவிட்டு, "நான் கூறியதைத் தாங்கள் மற்றத் துணைவியரில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்களில் எவரேனும் என்னிடம் (நீ சொன்னதைப் பற்றிக்) கேட்டால் நான் அவர்களிடம் அதைத் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன். அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்"என்றார்கள். (மேலும் பார்க்க ஸஹி புகாரி எண் 4786, முஸ்லிம் எண் 2939)
3) பணம் அதிகம் கேட்டதால், தலாக் கிடைக்கும் என்று பயமுறுத்துவது அல்லாஹ்விற்கு அடுக்குமா?
மேற்கண்ட குர்-ஆன் வசனங்களையும், அதைச் சுற்றியுள்ள பின்னணியையும் நாம் இதுவரை கண்டோம்.
மனைவி வீட்டுச்செலவிற்கு பணத்தை உயர்த்திக் கொடுங்கள் என்று கேட்பது பாவமா? விவாகரத்துக்குச் செல்லும் அளவிற்கு மிகப்பெரிய குற்றமா? மனைவிக்கு மென்மையாக எடுத்துச் சொல்லி, புரியவைப்பதை விட்டுவிட்டு, விவாகரத்து கொடுத்துவிடுவேன் என்று பயமுறுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது? முஹம்மதுவின் மனைவிகளுக்கே அல்லாஹ் உருவாக்கிய இஸ்லாமிய சமுதாயத்தில் இந்த நிலையென்றால், இதர முஸ்லிம்களின் குடும்ப பெண்களின் நிலை எப்படியிருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
முஹம்மதுவின் குடும்ப பிரச்சனையை தீர்க்க குர்-ஆன் வசனத்தை கொண்டு வர ஜிப்ரீல் தூதனை அனுப்புவது கொஞ்சம் அதிகமாகத் தோன்றவில்லை? வெளி உலகிற்கு அதாவது முஸ்லிமல்லாதவர்கள் இவ்வசனங்களை அல்லாஹ் இறக்கியதாக கருதமாட்டார்கள், தன் சுய லாபத்திற்காக முஹம்மதுவே இட்டுக்கட்டியது என்று கருதுவார்கள்.
இரண்டு மனைவிகளிடம் மென்மையாகப் பேசி, முஹம்மது தம் ஏழ்மை நிலையை! எடுத்துச் சொல்லி, அவர்களை சமாதானப்படுத்துவதை அறியாதவர் எப்படி ஒரு நபியாக 23 ஆண்டுகள் நீடித்தார்? தன் சொந்த குடும்பத்தின் சின்னச்சின்ன பிரச்சனைகளை தீர்க்கமுடியாதவர் எப்படி நாட்டை ஆண்டார்?
4) இவ்வசனத்தின் பாதிப்பு இஸ்லாமிய சமுதாயத்தில் எப்படி இருக்கும்?
இப்படிப்பட்ட வசனங்களும், ஹதிஸ்களும் முஸ்லிம் பெண்களுக்கு ஆபத்தானவைகளாகும்.
அ) குடும்ப பெண்கள் குடும்ப செலவிற்கு அதிகமாக பணம் கேட்டால் அவர்களை தலாக் செய்வதாக முஸ்லிம் ஆண்கள் பயமுறுத்துவதற்கு குர்-ஆனின் இவ்வசனம் காரணமாக அமைந்துவிட்டது.
ஆ) என் மனைவி குடும்ப செலவிற்கு பணத்தை உயர்த்திக் கொடுங்கள் என்று கேட்டார், நான் அடித்துவிட்டேன் என்று அபூ பக்கர் சொல்வது ஒரு காட்டுமிராண்டித் தனமான செயலாகும். இக்காலத்தில் ஒருவர் நம்மிடம் இப்படிச் சொன்னால், அவரை நாம் எப்படி பார்ப்போம்?
இ) அபூ பக்கரின் செயலை கண்டிக்காமல் முஹம்மது சிரித்தது, சின்ன சின்ன நியாயமான விஷயங்களுக்கு முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிப்பதை அவர் அங்கீகரிப்பதாக தெரிகின்றது. இப்படிப்பட்ட முஹம்மதுவின் செயல்களினால் முஸ்லிம் குடும்பங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூரங்களுக்கு வழிவகுக்கிறது.
ஈ) "இல்லை, நாங்கள் எங்கள் மனைவிமார்களை, அபூ பக்கரைப்போல, உமரைப்போல முஹம்மதுவைப்போல அடிக்கமாட்டோம்" என்று முஸ்லிம்கள் சொல்வார்களானால், இம்மூவர் செய்தது தவறு என்று முஸ்லிம்கள் சொல்லமுடியுமா?
உ) மேற்கண்ட முஸ்லிம் ஹதீஸில் அபூ பக்கரும், உமரும் முஹம்மதுவின் கண்களுக்கு முன்பாக எழுந்துச் சென்று, ஆயிஷாவையும், ஹஃப்ஸாவையும் (தங்கள் மகள்களை) அடித்துள்ளார்கள். ஆனால், தமிழில் மொழியாக்கம் செய்த நம் தமிழ் முஸ்லிம் அறிஞர்கள், அபூபக்கரும், உமரும் அடிக்க எழுந்தார்கள் என்றுச் சொல்லி மொழியாக்கம் செய்துள்ளார்கள், அவர்கள் அடித்தார்கள் என்று சொல்லவில்லை.
. . . .உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம்முடைய புதல்வி) ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி, அவர்களது கழுத்தில் அடிக்க எழுந்தார்கள். அடுத்து உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வி) ஹஃப்ஸாவை நோக்கி, அவர்களது கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள் . . .
ஆனால், ஆங்கில ஹதிஸில் இவ்விருவரும் அடித்தார்கள் என்று தான் மொழியாக்கம் செய்துள்ளார்கள். தமிழ் முஸ்லிம் அறிஞர்களுக்கு "அடித்தார்கள்" என்று மொழியாக்கம் செய்ய வெட்கமாக இருக்கின்றதா? அரபியில் எப்படி உள்ளது? எழுந்தார்கள் என்றுள்ளதா? எழுந்து அடித்தார்கள் என்று உள்ளதா? முஸ்லிம் அறிஞர்கள் அரபி ஹதீஸை படித்து சிறிது விளக்குவார்களா? (உண்மையைச் சொல்லவேண்டும், பொய்யைச் சொல்லி என்னை ஏமாற்ற முயலாதீர்கள், மாட்டிக்கொள்வீர்கள்).
ஊ) கடைசியாக, அவ்விரு பெண்களும், நாங்கள் இல்லாத ஒன்றை கேட்கவில்லை, இருப்பதைத் தான் கேட்கிறோம் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறினார்கள்.
. . . .அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாத எதையும் ஒருபோதும் நாங்கள் கேட்கமாட்டோம்" என்று கூறினர். . . .
முஸ்லிம்களே! உங்கள் அன்னைகள் பொய் சொல்கிறார்கள் என்று சொல்லவருகின்றீர்களா? உங்கள் அன்னைகள் அல்லாஹ்வின் மீதாணையாக என்றுச் சொல்கிறார்கள், அவர்கள் கூற்றை நம்பவேண்டுமா இல்லையா?
5) விலைவாசி எப்படி இருக்கின்றது?
நாம் வாழும் இந்த காலத்தை எடுத்துக்கொண்டாலும், குடும்ப செலவிற்கு நாம் மாதம் 5000 ரூபாய் நம் குடும்ப பெண்களுக்கு கொடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இதே தொகையை பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கொடுக்கமுடியுமா? விலைவாசிகள் உயரவில்லையா? கொஞ்சம் பணத்தை உயர்த்திக்கொடுங்கள், விலைவாசிகள் உயர்ந்துவிட்டது என்று ஒரு முஸ்லிமின் மனைவி கேட்டால், உடனே அவளை அடித்துவிட்டு, தலாக் கொடுத்துவிடுவேன் என்று அந்த முஸ்லிம் சொன்னால், அவனை என்னவென்று நினைப்பீர்கள்? ஓ.. இவர் முஹம்மதுவைப்போலவும், நபித்தொழர்கள் அபூ பக்கர் மற்றும் உமரைப்போலவும் நடந்துக்கொண்டார் என்று மெச்சிக்கொள்வீர்களா?
முஸ்லிம் பெண்களின் நிலை எங்கே சென்றுக்கொண்டு இருக்கிறது?
6) கடைசியாக, உங்கள் அன்னைகள் எடுத்த முடிவு என்ன?
முஹம்மதுவின் மனைவிகள் அதிக பணத்தைக் கேட்டார்கள், அபூ பக்கரும், உமரும் வந்து மகள்களை அடித்து திட்டினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக, இல்லாதவற்றை கேட்கவில்லையென்று மகள்கள் சொன்னார்கள், அதாவது முஹம்மதுவிடம் பணமிருக்கிறது என்று அவர்கள் சாட்சி கூறினார்கள். பிறகு முஹம்மது 29 நாட்கள் தனியாகச் சென்றுவிட்டார், அதன் பிறகு அல்லாஹ் குர்-ஆன் 33:28-29ம் வசனங்களை இறக்கினான்.
முஹம்மது ஆயிஷாவிடம் வந்து, அல்லாஹ் இறக்கிய வசனங்கள் இவைகள், உன் முடிவு என்ன என்று கேட்டார். ஆயிஷா எனக்கு நீங்க தான் வேண்டும் பணமும் வேண்டாம், தலாக்கும் வேண்டாம் என்று முடிவு செய்தார். இதே போல, இதர மனைவிகளும் முடிவு செய்ததாக ஹதீஸ் கூறுகிறது.
ஏன் ஆயிஷாவும், ஹஃப்ஸாவும் மற்றும் இதர மனைவிகளும் இந்த முடிவிற்கு வந்தார்கள்? இவர்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கின்றதா?
அ) முஹம்மது ஒரு நபி என்று எல்லோரும் நம்புகிறார்கள்.
ஆ) முஹம்மதுவிடம் தலாக் பெற்று அப்பா வீட்டில் உட்கார்ந்தால், அப்பா கோபப்படுவார், திட்டுவார் அடித்தே கொன்றுபோட்டுவிடுவார்.
இ) முஹம்மதுவை எதிர்த்துக்கொண்டு, அப்பாவையும் விட்டுவிட்டு வெளியே சென்று வாழுவதற்கு இவர்களுக்கு ஏதாவது வாய்ப்பு இருக்கின்றதா? நிச்சயமாக இல்லை.
உ) அப்படியே தலாக் பெற்று முஹம்மதுவை விட்டு வந்துவிட்டாலும், இன்னொருவருக்கு இரண்டாம் தாரமாக, மூன்றாம் தாரமாக, அல்லது நான்காம் தாரமாக முந்தானையை விரிக்கவேண்டியது தான். வெளியே சென்று கௌரவத்தை இழந்து வாழ்வதை விட, இங்கேயே அதனை இழந்து வாழலாமே. குறைந்தபட்சம், இறைத்தூதரின் மனைவி என்ற பட்டமாவது கிடைக்கும்.
ஊ) சாதாரணமாக ஒரு முஸ்லிமின் மனைவி தலாக் பெற்றால், இன்னொருவன் திருமணம் செய்துக்கொள்வான், ஆனால் முஹம்மதுவின் மனைவி தலாக் பெற்றால், யாரும் திருமணம் செய்யமுடியாது, ஏனென்ரால், அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கே தாய்மார்கள். ஆனால், முஹம்மது முஸ்லிம் சமுதாயத்திற்கு தந்தைமார்த இல்லை, எனவே அவர் யாரைவேண்டுமானலும் திருமணம் செய்யலாம்.
எ) இது மட்டுமா, முஹம்மதுவோடு இருந்தால், அல்லாஹ் நல்ல கூலியை கொடுப்பான், சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். முஹம்மது வேண்டாம், தலாக் வேண்டும் என்றுச் சொல்லி வெளியே வந்துவிட்டால், யாருக்குத் தெரியும்? இவர்களைப் பற்றி குர்-ஆன் வசனம் எப்படியாவது வெளிப்படலாம். இவர்கள் என் இறைத்தூதரை துக்கப்படுத்திவிட்டார்கள், இவர்களை கொன்றுவிடுங்கள் என்று குர்-ஆன் வசனம் இறங்கினாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதில் இன்னொரு வினோதம் என்னவென்றால், அப்படி ஒரு குர்-ஆன் வசனம் இறங்கினால், முதலாவது வாளை எடுத்துக்கொண்டு கொலை செய்ய புறப்படுபவர்களாக அபூ பக்கரும், உமரும் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை (மகள்களைக் கொல்ல). நமக்கு எதற்கு வம்பு என்று முஹம்மதுவின் மனைவிமார்கள் அனைவரும் முஹம்மதுவையே கோரினார்கள், கடைசி வரை அவரது மனைவிகளாகவே, அவர் மரித்த பிறகு விதவைகளாகவே வாழ்ந்து மரித்தார்கள், பரிதாபத்துக்கு உரிய அன்பு அன்னைகள்.
இப்படிப்பட்ட காரணங்களினால் தான் புத்திசாலியான முஸ்லிம்களின் அன்னைகள் சரியான முடிவை தெரிவு செய்தார்கள்.
தலாக் 3 – முடிவுரை:
குடும்ப செலவிற்கு பணத்தை உயர்த்திக்கொடுங்கள் என்று கேட்பது விவாகரத்து கொடுக்கும் அளவிற்கு பெரிய பாவமா? சிந்தித்துப் பாருங்கள்.
- அல்லாஹ் ஏன் இப்படி பிளாக்மெயில் செய்யவேண்டும்?
- முஹம்மது உருவாக்கிய சமுதாயம் ஆணாதிக்க சமுதாயமா?
- திருமணமான பெண்களை கணவன் அல்லது தகப்பன்மார்கள் அடிக்கும் போது, சிரித்த முஹம்மது எப்படிப்பட்டவர்?
- குடும்ப செலவிற்கு பணம் கேட்ட குடும்ப தலைவியை அடித்த அபூ பக்கர் எப்படிப்பட்டவர்?
- முஹம்மது மற்றும் முதல் கலிஃபாவாக பதவி வகித்த அபூ பக்கர், இரண்டாம் கலிஃபாவாக பதவி வகுத்த உமர் - இம்மூவரின் பார்வையில் பெண்கள் என்றால் யார்?
தலாக் 4ல் சந்திப்போம், அது வரை வாசகர்கள் இவர்கள் பற்றி சிந்தித்துப்பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக