ஸூரா 5:112. "மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?" என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், "நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறினார். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
இந்த வசனத்தில், இயேசுவின் சீடர்கள் அவரை "ஓ மர்யமுடைய மகன் ஈஸாவே" என்று அழைத்து பேசுகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இங்கு சந்தேகத்திற்குரிய அசாதாரணமான செயல் ஒன்றுமே தெரியவில்லை. ஆனால் குர்ஆனின் பெரும்பாலான வாசகர்கள் கவனிக்கத் தவறிய ஒரு நுட்பமான பிரச்சனை இங்கு உள்ளது.
குர்ஆனில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் இயேசுவின் பெயர் குறிப்பிடப்படும்போது, அதைத் தொடர்ந்து "மர்யமின் மகன்" என்ற மேலதிக "பட்டப்பெயர்" சேர்க்கப்பட்டுள்ளதை கவனிக்கலாம், பார்க்க: குர்ஆன் 2:253, 4:171, 5:17, 5:72, 5:75, 5:110, 5:112, 5:114, 5:116, 9:31, 19:34, 23:50, 33:7 & 43:57.
இது உங்களுக்கு விசித்திரமாகத் தெரியவில்லையா?
குர்ஆன் 3:45ல் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது
ஸூரா 3:45. மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
ஒரு நிமிடம் பொறுங்கள், அவருடைய பெயர் "மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா" என்பதா? இப்படி யாராவது பெயர் வைப்பார்களா? ஈஸா என்பதும், மஸீஹ் என்பதும் பெயர்கள் என்றுச் சொன்னாலும் ஒப்புக்கொள்ளலாம், அது என்ன "மரியமின் மகன்" இப்படி யாராவது பெயரை சூட்டுவார்களா? ஆம், இதைத்தான் குர்ஆன் அடிக்கடி தொடர்ச்சியாக நமக்கு சொல்லித் தருகிறது.
புதிய ஏற்பாட்டிலும், நற்செய்தி நூல்களிலும், ஒரு போதும் இயேசுவை "மரியமின் மகன்" என்று குறிப்பிடப்படவே இல்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதுவும் "அவர் மீது சந்தேகம் கொண்டு, அவரை விசுவாசிக்காதவர்கள் 'இவர் மரியாளின் மகனல்லவா' என்று சொன்னார்கள்.
மாற்கு 6:3. இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்.
இயேசுவின் சீடர்கள் இப்படித் தான் அவரை அழைத்து பேசினார்கள் என்று குர்ஆன் சொல்கிறது.
நற்செய்தி நூல்களில், இயேசுவின் சீடர்கள் அவரை அழைக்கும் போது, "ஆண்டவரே, எஜமானரே, ரபி, ஆசிரியரே" என்று அழைத்தார்கள் என்று நாம் அறிவோம். ஆனால், ஒரு போதும் "ஓ இயேசுவே" என்றோ, "மரியமின் மகன் இயேசுவே" என்றோ பெயர் குறிப்பிட்டு அழைத்ததாக நாம் காணமுடியாது. இப்படி பெயர்ச் சொல்லி அவரை அழைத்தால், தங்கள் ரபி மற்றும் ஆசிரியருக்கு அது அவமரியாதை என்று அவர்கள் கருதினார்கள்.
ஆனால், "மர்யமின் மகன்" என்ற பட்டப்பெயரை ஒவ்வொரு முறையும் சீடர்கள் இயேசுவிடம் பேசும் போது சேர்த்துக்கொண்டதாக அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான். இது இயற்கைக்கு மாறான பேச்சு மட்டுமல்ல, அவமரியாதையும் கூட. மேலும் கேலி அல்லது அவநம்பிக்கையின் ஒரு வடிவமாக பயன்படுத்தப்பட்டாலொழிய, இப்படி கூறுவது சிறிதும் அர்த்தமுள்ளதாக இல்லை.
இப்படிப்பட்ட ஒரு விசேஷித்த விசித்திர சலுகையை குர்ஆன் யாருக்குமே கொடுக்கவில்லை என்பதை கவனிக்கவும். அதாவது
- மூஸா நபி "இன்னாரின் மகன் மூஸாவே" என்று அவர் அழைக்கப்படவில்லை.
- இப்றாஹீம் நபி "இன்னாரின் மகன் இப்றாஹீமே" என்று அவர் அழைக்கப்படவில்லை.
- தாவூது நபி "இன்னாரின் மகன் தாவூதே" என்று அழைக்கப்படவில்லை.
- அவ்வளவு ஏன், முஹம்மதுவை குறிப்பிடும் போது கூட "இன்னாரின் மகன் முஹம்மதுவே" என்று குர்ஆன் அழைப்பதில்லை.
ஆனால், இயேசுவிடம் வரும் போது மட்டும் "மரியமின் மகன்" என்று குர்ஆன் அடைமொழி கொடுத்து பேசுகிறது, ஏன்?
வியாபார கொடுக்கல் வாங்கல் காரியங்களின் போது, உடன்படிக்கைகளை எழுதும் போது, அப்துல்லாவின் மகன் முஹம்மது என்று எழுதப்படுவது வேறு, ஆனால், இருவர் நேருக்கு நேர் நின்று பேசும் போது, ஒவ்வொரு முறையும் "அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுவே" என்று அழைத்து பேசமாட்டார்கள். இது நடைமுறையில் நடக்காத ஒன்று.
இப்போது ஒரே ஒரு கேள்வி நம் கண் முன் நிற்கிறது; "மரியமின் மகன்" என்ற சொற்களை ஏன் இயேசுவிடம் பேசும் போது ஒருவர் குறிப்பிடவேண்டும்?
இயேசுவிடம் நேரடியாக அவரது சீடர்கள் பேசும் போது, ஏன் "மர்யமின் மகன்" என்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தவேண்டும்? ஒரு வேளை "தாம் மர்யமின் மகன்" என்பது இயேசுவிற்கே தெரியாதா? இதனை அவர் அறியவில்லையா? இதனை ஒவ்வொரு முறையும் சீடர்கள் பேசும் போது குறிப்பிட்டு அவருக்கு அதனை ஞாபகப்படுத்துகிறார்களா? இது வேடிக்கையிலும் வேடிக்கையாக தெரியவில்லையா?
இதற்கான பதில் என்னவென்றால், "குர்ஆன் ஆக்கியோன் தன் சொந்த இறையியல் விவரத்தை இங்கு நுழைக்க விரும்புகிறான், அதாவது, இயேசு "தேவ குமாரன் அல்ல", அவர் ஒரு சாதாரண "பெண்ணுக்கு பிறந்த ஒரு பிள்ளை தான்" என்ற தன் சொந்த கருத்தை குறிப்பிடவே குர்ஆனில் எல்லா இடங்களிலும் இதனை குறிப்பிடுகிறார் என்பது நமக்கு புரிகின்றது.
ஆனால், குர்ஆனின் படி "சீடர்கள் ஏன் அதனை பயன்படுத்தினார்கள்?"
முஸ்லீம்களின் கூற்றுப்படி, இயேசு தன்னை இறைமகன் என்று ஒருபோதும் சொல்லவில்லை, எனவே அவருடைய சீடர்கள் அத்தகைய கருத்தை முன்வைக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய கருத்தைக் கூறுவது ஒரு கேலிக்குரிய, தேவையற்ற மற்றும் இழிவான செயலாக இருந்திருக்கும்.
இஸ்லாம் சொல்வதின்படி, இயேசு ஒரு நபி மட்டுமே என்ற கூற்றை ஒரு பேச்சுக்காக ஏற்றுக்கொண்டாலும், "இயேசு மரியாளின் குமாரன் என்றும், அவர் ஒரு தீர்க்கதரிசி மட்டுமே என்றும் சீடர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும், அப்படி இருக்கும் போது, சீடர்களின் பேச்சில் "மர்யமின் மகன்" என்ற அதிகபடியான சொற்களை அல்லாஹ் சுயமாக சேர்த்தது, ஒரு தில்லுமுல்லு செயலாகும் என்பதை நாம் புரிந்துக்கொள்ளலாம்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "குர்ஆனின் ஆசிரியர் அல்லாஹ் தனது சொந்த வார்த்தைகளை சீடர்களின் வாயில் திணிக்கிறான். அவன் முந்தைய மக்கள் பேசிய வார்த்தைகளை மாற்றியும், சிலவற்றை இட்டுக்கட்டியும், தான் என்ன சொல்லவேண்டும் என்று விரும்புகிறானோ, அதனை சீடர்கள் சொன்னதாக சொல்லி ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்க முயன்றுள்ளான்". அதாவது இயேசு இறைக்குமாரன் இல்லை என்ற தனது சொந்த கருத்தை நிலைநாட்ட, தேவையில்லாத இடங்களில் முட்டாள் தனமாக "மர்யமின் மகன்" என்ற அதிகபடியான சொற்களை இடையிடையே சொறுகியுள்ளான் என்பது இதன் மூலம் அறியலாம்.
தேதி: 16th April 2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக